Wednesday, July 22, 2009

NGOs India : Online Database and Resources of Indian NGOs, NPOs, VOs; Funding Resources and Database

NGOs India : Online Database and Resources of Indian NGOs, NPOs, VOs; Funding Resources and Database

Shared via AddThis

Thursday, July 02, 2009

நாங்களும் போட்டாச்சில்ல

தென்றலிடமிருந்து மிரட்டல் மடல் ஒன்று. ஆகா... மென்மையான அவரை மிரட்டும் அளவுக்கு தள்ளி விட்டோமேன்னு நெனச்சிட்டு இருக்கும் போது, நமக்கும் ஒரு வாரம் வேலை வெட்டி இல்லை என்ற நிலையை இந்த தொடர் விளையாட்டில் பங்கெடுக்க உபயோக படுத்தியாச்சி.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
புனைப்பெயர்:
விளக்கம் என்னோட ஃப்ரோஃபைல்ல இருக்குமே. என் அப்பா என்னை Free sprit என்பார். என் தோழி என்னை காட்டாற்றுக்கு ஒப்பிடுவார். இரு பெயர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாய் பட்டது. அவ்ளோ தான். நான் எழுதும் கிறுக்கல்களுக்கும் இப்பெயர் உபயோகித்தேன். அதே பெயர் கொண்டே ப்ளாக் ஆரம்பித்து விட்டேன்.

பெற்றோரிட்ட பெயர்:
எங்கள் வீட்டில் எனக்கு மட்டும் தான் வித்தியாசமான பெயர். பள்ளியில் படிக்கும் போது இந்து, கிறிஸ்தவ குழப்பம் வரும். அப்போ என்னடா நமக்கு மட்டும் இப்படி செய்து விட்டார்களே என நினைத்தது உண்டு. அப்புறம் என் வட்டம் மறைய தொடங்கிய பின், பெயர் பெரிதாக தெரியவில்லை. வெளிநாடுகளில் வேலை பார்க்க ஆரம்பித்த பின், பெயர் விளக்கம் கேட்கும் போது, பெயரிலே அன்பு இருப்பதால், இரசித்து விளக்கி சொல்வதால், என் பெயர் ரொம்ப பிடிக்கும்.

2) கடைசியா அழுதது எப்போது?
20 வருஷம் முன்னர் என் அப்பா இறந்த போது கதறியது. அந்த நிகழ்விற்கு பின் நமக்கும் அழுகைக்கும் வெகு தூரமாகிவிட்டது. ஆனா, சின்ன புள்ளையா இருக்கும் போது எதுக்கெடுத்தாலும் அழுவேன்னு எங்க அம்மா சொன்னாங்க. இப்போ, குழந்தைகளையோ, வயது முதிர்ந்தவர்களையோ யாரேனும் துன்பப் படுத்தி, அதனால் அவர்கள் கண்கலங்கினால், நமக்கும் கண்கலங்குவது உண்டு.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
கண்டிப்பா. சிறுவயதில் பரிசெல்லாம் வாங்கியிருக்கிறேனாக்கும். ;-) பரிசுக்காக எழுதி பழகிய நாட்களும் உண்டு. இப்போ முன்ன மாதிரி அழகா இல்லைன்னாலும், நான் இரசிக்கிற மாதிரி தான் இருக்குது.

4) பிடித்த மதிய உணவு?
எல்லா வெஜிடேரியன் சாப்பாடும் வஞ்சனை இல்லாது சாப்பிடுவேன். கடல் வாழ் பிராணிகளில் இறால் பிடிக்கும்.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பா!இப்பவே நான் எனக்கு நண்பன் தானே!

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலோ, அருவியோ, குளமோ, குட்டையோ, தொட்டியோ…. குளிப்பது ரொம்பப் பிடிக்கும். அதுவும் பரந்த வெளியில் குளிப்பது…ம்ம்ம்.. ஆகா… என்ன சுகம்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
அவர்கள் பேசும் வார்த்தைகளை.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது:
(1) எந்த பிரச்சனை என்றாலும், அது என்னை ஆக்கிரமிக்க இடம் கொடுக்காது உடனே அடுத்து என்ன செய்ய வேண்டும் என பேச ஆரம்பிப்பது. இக்குணத்தால் சில பல நண்பர்களை இழக்கவும் செய்திருக்கிறேன் என்றால் மிகையில்லை. (அவங்க என் கிட்ட சொன்னது; there is a time to moan and there is a time to rejoice-ன்னு.) (2) இரசனை. (3) காலை வேளையில் படுக்கையில் உருண்டு கனவு காண்பது

பிடிக்காதது:
(1) நேர நிர்வாகத்துல வீக் நான். ஆனா பாருங்க… வேலையில் அதில் தான் நல்ல பெயர். ஆனால், வீட்டிலோ, என்ன இப்படி இருக்குறன்னு கேப்பாங்க. (2) 24 மணி நேரம் பத்தவில்லை என பொலம்புவது.

9) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
கேட்டு சொல்லவா?

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
எல்லாருமே பக்கத்துல இருக்குற மாதிரி நெனச்சுக்குவேன். பேசுவேன். ஆகவே, இது வரைக்கும் வருந்தினதில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
கறுப்பு.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
பார்த்துக் கொண்டிருப்பது - மானிட்டரை.
கேட்டு கொண்டிருப்பது - 'ச்சிச்சிச்சி.. என்ன பழக்கம் இது' பாடல்

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
வானவில்.

14) பிடித்த மணம்?
நெறையா இருக்கு.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
பூக்கிரி – இவங்க பதிவுலக உதவி தாரகைன்னு பலர் சொல்ல கேள்வி. ;-) புதிதாக திருமணம் ஆனவர். அவர்கள் புரிதல் அறிய கூப்பிட்டாச்சு.

தெக்கிக்காட்டான் – இவரு என்னமோ எப்பவுமே சீரியஸா இருக்குற மாதிரியே தோணும். எழுத்துக்களில் மட்டும். ஜாலியா எழுதட்டுமேன்னு கூப்பிடுறேன்.

கண்மணி - இரசித்து வாசித்த இல்ல சிரித்த பல பதிவுகள் இன்னும் நினைவிருக்கு. இவங்க அடிக்கடி டெம்ளேட் மாத்துவதை ரசித்திருக்கேன். ரொம்ப நாளா இவங்களை காணோம். அதான்.

நாமக்கல் சிபி – இவரின் கலாய்த்தல் பதிவுகளும், பின்னூட்டங்களும் பிடிக்கும். இவருடைய பின்னூட்டங்கள் படிப்பதற்காகவே ரீடர்ல இருந்து கவிதாவின் பதிவுகளுக்கு செல்வது வழக்கம்.

மங்கை – இவங்க சேவை நமக்கு பிடிக்கும். சில்லுனு சிரிப்பாங்க. பிடிக்கும். நம்ம தோஸ்தாக்கும். அம்மணி சொந்த ஊருக்கு போயிருக்காக. நல்ல மூடுல இருப்பாங்கல்ல.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
தென்றல் - இவருடைய பதிவுகள் இவரைப் போலவே மென்மையானவை. இவருடைய நாணயம் பதிவுகள் அனைத்தும் எளிமையாக, எனக்கும் புரியுறது போல இருக்கும்.

17) பிடித்த விளையாட்டு?
புரண்டெழுந்து விளையாடும் அனைத்து விளையாட்டுகளும்.

18) கண்ணாடி அணிபவரா?
சுரியனார் வீச்சத்திற்கு மட்டும்.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
மூன்று மணி நேரம் விரையமாக்க விருப்பமில்லை.

20) கடைசியாகப் பார்த்த படம்?
தெரியல.

21) பிடித்த பருவ காலம் எது?
இளம்பிராயம். ;-) ஓ…. அதைக் கேக்கலையா? காலத்தில், குளிரிமில்லாது, வெயிலும் அல்லாது ரெண்டுகெட்டான் பருவம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
எப்போதும் கட்டிலை சுற்றி புத்தகங்கள் இறைந்து கிடக்கும். அன்று இருக்கும் மூட் படி எடுத்து வாசிக்க வேண்டியது தான். நேற்றிரவு வாசித்தது The Inferno – Dante Alighieri . என்னுடன் வேலை பார்க்கும் ரஷ்ய நண்பர் இந்த புத்தகத்தை வாசிக்க சொல்லி உற்சாக படுத்தினார். ஆங்கில இலக்கியமோன்னு கொஞ்சம் உதறலோடு வாசிக்க ஆரம்பிச்சேன். ஆனா முன்னுரையே ஆகான்னு சொல்ல வச்சிருச்சி. ரொம்ப நாளுக்கு அப்புறம் இரசித்து வாசிக்கிற புத்தகம் இது. இவரின் இத்தாலிய எழுத்துக்களை மொழிபெயர்த்துள்ளவர் Henry Fances Carey.

அப்புறம் Charles Seife Zero a biography of a Dangerous Idea-விலிருந்து ஒரு அத்தியாயம் வாசித்தேன். நமக்கு தெரிந்த விஷயங்கள் பல இருந்தாலும், அட போட வைக்கும் விஷயங்களும் உண்டு. முடிந்தால் கண்டிப்பா வாசிங்க.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
15 நிமிடத்திற்கு ஒரு முறை அதுவே மாறிக்கொள்ளும். நான், என் நண்பர்கள் எடுத்த இயற்கை காட்சிகளும், மக்களும் அதில் அடங்கும்.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்:
குழந்தை/பறவைகளின் குரல், அடர்த்தியான மரங்களினூடே ஊடுறுவி மெல்லிதாக சலசலக்க வைக்கும் தென்றல், அப்புறம்… பருவகால சப்தங்கள்

பிடிக்காத சத்தம்:
அப்படியெல்லாம் இல்லை. ஆனாலும், டயர்டா இருக்கும் போது நிசப்தம் பிடிக்கும். சிறு குண்டூசி விழும் சப்தம் கூட பிடிக்காது. டயர்டா ஆகுறது ஆடிக்கொரு முறை தான். ;-)

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
தினம் தினம் என் ஆபீஸுக்கு தான். ஒரு வழி மட்டும் 37 மைல்கள்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்குதே.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பொய்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
இரசனை.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
மலையும் மலையைச் சார்ந்த இடங்களும்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படி ஏதுமில்ல. அப்படி கண்டிப்பா ஆசை இருந்து தான் ஆகனுமின்னா... இப்படியே இருக்கனுமின்னு-ன்னு சொல்லலாம்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
வரும்போது சொல்கிறேன்

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
Let go.

Thursday, June 25, 2009

இனியும் நான் என்ன செய்யவேண்டும்



இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

எம் தாயை அழித்து
எங்கள் தந்தையை நடை பிணமாக்கினாய்
எம் தந்தையைக் கொன்று
எங்கள் தாயை பேதலிக்க செய்தாய்

எம் சகோதரிகளை சீரழித்து
எங்கள் சகோதர்களை உசுப்பேத்தினாய்
எம் சகோதர்களைக் காயப்படுத்தி
எங்கள் சகோதிரிகளை வெறுப்பேத்தினாய்

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

ஆட்டு மந்தையை விட
கேவலமாய் நடத்தினாய்
சொந்த நாட்டில் எம்மை
அவமான சின்னங்களாக்கினாய்

ஒரு வேளை சோற்றுக்கும்
சொரணை இழந்து
கேவலமாய் கையேந்தும்
அடிமைகளாக்கினாய்

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

தட்டும் கதவொலியும்
பீரங்கி இடியாய்
மனதை திடுக்கிட
வைக்கும் அவலம்

சுளீரென பதற வைக்கும்
குழந்தையின் உரசலும்
திடுக்கிட்டு திரும்பி
மேனியை தகிக்க வைக்கும்

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

உன் உ--பு
எம் பெண்டீர் வாய் கிழிக்கும்
உன் துப்பாக்கி
எம் பெண்டீர் -- கிழிக்கும்

எமது ஓலம்
தேனாய் பாயுது உன்னுள்
எங்களின் கூக்குரல்
கொண்டாட வைக்குது உன் --யை

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

வெடிக்கும் துப்பாக்கியும்
துளைக்கும் பீரங்கியும்
குண்டு மழையும்
எம் காதுகளை செவிடாக்குது

எம் சீவன் அழித்தாய்
இனியும் அவமானப் பட
இருக்கிறதா ஏதுவும்
எம்மிடம்

இன்னும் நீ என்ன செய்ய
வேண்டும் எங்களை
இனியும் யாம் என்ன செய்ய
வேண்டும் உனக்கு

வடிந்து ஓடும் எம்மவர் குருதி
எம் கண்ணீரை வற்ற வைக்கும் முன்
உன் மிருக செயல்கள்
எம்மை நீசனாக்கும் முன்

எம்மை யாம் மறக்கும் முன்
உன் குல மக்களுக்கும்
எம் மக்களின் நிலை வரும் முன்
காத்துக் கொள் உன்னை

எம் குலம் தழைக்க
எம் மொழி நிலைக்க
எம் நாடு எமக்கே தர
சுதந்திரமாய் வாழ

இனி நீ என்ன செய்ய
வேண்டும்
நாங்கள் என்ன செய்ய
வேண்டும்
என நீயே தீர்மானி!

Friday, May 08, 2009

வளருங்கப்பா

எங்க அப்பா எப்பவும் சொல்லுவாங்க. தவறை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருப்பவன் தான் தவறு செய்யனும். அப்படி தைரியம் இல்லைன்னா, பொய் மேல் பொய் புனைந்து பொய்யனாகி விடுவான்னு, பின்ன எதுக்கும் (பொய்க்கு தவிர) லாயக்கில்லாதவனாகி விடுவான்னு. (இந்த வரி நான் சேர்த்துகிட்டேன்). :-D தவறு செய்பவனை கண்டிக்க தவறுவதும் தவறாமே. தான் செய்த தவறை உணரும் போது, அவன்/அவள் வளர்கிறானாம். இடித்துரைத்தால் அவ்வளர்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ளுவீங்க. இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னு எனக்கு தெரியலப்பா. ஆனா பாலபாரதி எழுதிய பதிவை படித்ததும் கன்னா பின்னான்னு தலைக்கு ஏறுது. அட ஏனப்பா? சின்ன புள்ள மாதிரின்னு. ஏன்னு தெரியுமா? தனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தா, பிரச்சனைக்குரியவரை நேரடியாக அணுகுவது நல்லது. உங்க ரெண்டு பேருக்கும் தீர்க்க முடியவில்லையா? அப்போ பொதுவா கொண்டு வரும் தைரியமும் இருக்கனும். நீங்க அதுக்காக பதிவு எழுதறதை நிறுத்திட்டேன்னு சொல்லுறது…. என்ன சொல்லுறதுன்னு தெரியல. பிரச்சனையை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தால், மனசை அலைக்கழித்து கொண்டு தான் இருக்கும். அப்பப்போ தட்டி கேளுங்க. நிம்மதி வரும். நிம்மதியோட வாழலாம்.

இதைத்தான் (வளருங்கப்பா) நானும் பல பேருகிட்ட சொல்லுறேன். கேக்க மாட்டேன்னு அடம். என்ன சொல்ல அவங்களை. பொண்ணுங்களுக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகமாமே? அப்படியா? அப்போ கொஞ்சமாவது உபயோகிக்கலாமே அதை. இதை சொல்ல தான் இந்த பதிவு. இங்கு தவறு என பேசுவது சாட், ப்ளாக் இவற்றை மட்டும் மனதில் கொண்டு தான். சரியா?

இரண்டு கை தட்டினா தான் ஓசை மக்களே. நான் உங்களுக்கு சொல்லனுமின்னு இல்ல. நீங்க தானே தொலைபேசி எண் கொடுக்குறீங்க. சாட் பண்ணுறீங்க. அப்புறம் என்ன? பேசுங்க. வேண்டாமின்னு சொல்லல. உங்கள் குடும்ப விஷயம் பற்றி தான் பேச வேண்டுமா? எவ்வளவோ நாட்டில் நடக்குதே. அதை பேசலாமே. சரியப்பா… வீட்டு விஷயத்தை பேசுறீங்க. அந்த விஷயம் வெளில வந்தா பரவாயில்லைன்னு தோணியதுன்னா பேசுங்க. இல்லைன்னா ஏன் பேசனும்? உங்களில் வெளி வரும் எண்ணங்கள் வார்த்தையாக மாறும் போது பொது உடைமை ஆயிபோச்சே. அவர் வரம்பு மீறுவதாய் தோணுதா? சொல்லிப் பாருங்க. அதுவும் நடக்கலையா இருக்கவே இருக்கு ப்ளாக் பண்ணுறது.

சரி.. இதெல்லாம் மீறி போயாச்சி. நல்ல நண்பர்கள் ஆயிட்டீங்க. வீட்டுக்கு வர போக அல்லது தொலை பேசியில் கதை அடிக்கும் அளவுக்கு வளர்ந்தாச்சி. இப்போ அந்த நண்பரோட செயல்களில் மாற்றம் பாக்குறீங்க. பயத்தாலோ, கலக்கத்தாலோ இல்லை அதிர்ச்சியிலோ இரண்டு முறை அமைதியா இருக்குறீங்க. எல்லை மீறுதல் தொடருது. என்ன செய்யலாம் இப்போ. அவரின் செயல் உங்களுக்கு மன அயர்ச்சி கொண்டு வருவதை சொல்லுங்க. அப்படியும் தொடர்ந்தால், உங்களுக்கு பரிச்சியமான முறையில் அவருக்கு ஷாக் கொடுங்க. அவர் தொடர்பை துண்டியுங்கள். உங்கள் மன நிம்மதி தவிர வேறொன்றும் முக்கியமில்லை நண்பர்களே. அவர் மேலும் துன்பம் கொடுத்தால் இருக்கவே இருக்கு ப்ளாக். போட்டு தாக்குங்க. நேரடியா சொல்லுறது மாதிரி பலன் கொடுப்பது வேறேதும் இல்லைங்க. மறைமுகமா பேச வேண்டிய விஷயமில்லை. நீங்க பூனைக்கு மணி கட்ட பயந்தால், உங்களை போல் ப்ளாக் பரிச்சயமில்லாத, உங்க அளவுக்கு சுதந்திரம் இல்லாத, உங்க அளவுக்கு படிக்காத, பல தோழியருக்கு இவரால் மன சுமை வந்திருந்தால்; வரவிருந்தால்.

முடிக்கும் முன் ஒன்னு சொல்ல விரும்புறேன். பல வருடங்களுக்கு முன் நான் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப் பட்ட, கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு (10-17 வயதுக்குட்பட்ட) கவுன்சிலிங் பண்ணிட்டு இருந்தேன். அங்கு நான் கேட்ட சொல், எச்சூழ்நிலைக்கும், எல்லாருக்கும் பொருந்தும். “பொண்ணுங்க அப்படி தான் டா வேணாமின்னு சொல்லுவாங்க. நீதான் பார்த்து செய்யனும் என்றும்; பொண்ணுங்க வேண்டாமின்னு சொன்னா அது அர்த்தமில்லைன்னும், வெட்கத்தால் வந்தது எனவும்” பொய் போர்வை கொண்டு ஆண்மக்கள் வளர்க்கப் படுகிறார்கள். அங்கே படிப்பறிவு இல்லாத மக்கள். ஆனா ப்ளாக் எழுத வரும் நீங்க படிச்சவங்க. இதனால தான் சொல்லுறேன். இப்படி தான் இடித்துக் காட்ட வேண்டுமென நான் சொல்ல வரல. ஆனா கொடுப்பதை திருப்பி ஸ்ட்ராங்கா கொடுங்க. வலிக்கனும். மறுபடி செய்ய பயப்படனும்.

Monday, July 28, 2008

சரியா போச்சிப் போ



வேக வேகமா ரிசர்வ் செய்ய வேண்டிய வேலைகளை ஆரம்பித்தாகிவிட்டது. கழுதை எட்டி உதைத்து விட்டது. குதிரையோ எங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஏமாற்றத்தை உதறிவிட்டு ஹுலப்பாய்க்கு தொலைபேசினால், 18 மாதத்திற்க்கு முன்னரே ரிசர்வ் செய்திருக்க வேண்டும். அப்பப்போ தொலை பேசுங்கள். எவராவது கான்செல் செய்தால், அந்த அறையை உங்களுக்கு தரலாம் என கடுப்படிக்கிறார்கள். சரி இந்த இரு நாட்களை சரி செய்ய என்ன செய்யலாமின்னு யோசித்து வான நடை (Sky Walk in Grand Canyon) பயிலலாமின்னு முடிவு செய்தாச்சி. நண்பர் அடுத்து என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாதுன்னு பட்டியல் போடலாமின்னு சொல்லுறார். நான் போர் கொடி தூக்குனது வலைக்கும், கைப் பேசிக்கும் மட்டும் தான். இந்த ரெண்டும் வேண்டாமின்னு சொன்னேன். ஒரு முறை முறைத்தவர் பெரிய மனசு பண்ணி தொலைஞ்சி போன்னு ரெண்டுக்கும் நோ நோ சொல்லியாச்சி. காட்டில் (?) தான் தங்கனுமின்னு சொல்லியாச்சி. அது சூப்பர். அப்போ மறந்துறாம அந்த டாய்லட் டிஷ்யூ எடுத்து வச்சிரும்மான்னு கட்டளை வேற. சின்ன மாறுதல் எங்களுடைய ப்ளானில். எல்லாம் முடித்தாகிவிட்டது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு உட்கார முடியல.

சின்ன குக்கர், பயண சைஸ் எலெக்ட்ரிக் ப்ர்னர், சின்ன சின்ன பாத்திரங்கள் இரண்டு எனவும், மத்தபடி ஒருமுறை உபயோகித்து தூக்கி எறிவார் போல் தட்டு, கரண்டி எல்லாம் எடுத்துக் கொண்டாச்சி. கொஞ்சம் அரிசி, ரவை, பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, மிளகு, கடலைப் பருப்பு, நிலக்கடலை எடுத்தாச்சி. அங்கே போனதும், தண்ணீர், சமையல் எண்ணெய், பால், மோர் வாங்கிக் கொள்ள கடை பார்த்தாயிற்று.

நெடும்நடைப் பயணம் அல்லவா? அதுக்கு ஏத்த மாதிரி காலணி, தார்குச்சி (Trekking poles), தொப்பி எல்லாத்தையும் தூசி தட்டி எடுத்து வெளியே வச்சாச்சி. தினமும் நடை பழகனுமின்னு திட்டமும் தீட்டியாச்சி.

இதுக்கிடையில் நண்பர் இந்தியாவிலேருந்து தொலைபேசுறார். வேலை விஷயமாக 3 மாதம் அமெரிக்கா வருவதாய் சொல்ல, நானும் அதி சந்தோஷமாய் எங்களின் திட்டத்தை சொல்ல, அவர் நானும் வருகிறேன் என்றார். ஒரே குஷியாப் போச்சி. சில மாற்றங்கள் ப்ளானில். ஏனெனில், நண்பருக்கு உயரம் பயம். எனக்கு ஓவர் சோகமா போச்சி. அய்யோ பல திட்டங்கள் மாறிவிடுமோன்னு. அவரோ.. கவலைப்படாதே அடித்து விளையாடலாமின்னு தைரியமா குரலில் நடுக்கத்தோட சொல்லுறார். இப்போ மறுபடியும் அடுத்த ரவுண்டு ரிசர்வேஷன். ரீவிசிட் அடிச்சாச்சி.

தினம் மாலை 1 மணி நேரம் காணும் இடங்களை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கியாச்சி. வேலை வட்டத்தில் ஆவலாக கதை கேட்டவர்கள் ஏராளம். தாரளாமாய் சந்தோஷத்தை காண்பிக்க, பொறாமைப் பட்டவர்கள் சிலர். நம்மை பயம் காண்பிக்கவும் தயங்கவில்லை அவர்கள். 100 F வெயிலாச்சே. எப்படி சமாளிப்பாய்? மறந்துறாம ஜாக்கெட் எடுத்துக்கோ. மாலையானால் குளிரும் அப்படின்னும் சொல்லுறாங்க. பீக் சீசன் அதனால நீ நினைக்கிற அளவுக்கு அனுபவிக்க முடியுமா? இந்த சமயத்தில் போய் போறியே. அப்படின்னு ஏகப்பட்ட டிஸ்கரேஜ்மெண்ட். அதெல்லாம் நாம் கண்டுக்க முடியுமா? ப்பூன்னு ஊதித் தள்ளினாலும் 100F வெயில் கொஞ்சம் மனசை அசைத்து பார்த்ததென்னவோ உண்மை.

ஆபிஸில் வேலை வேலைன்னு திரும்பவும் திரும்ப முடியாம வேலை வர, தினமும் நடக்க வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறையாக குறைந்தது. நாம கண்டுக்காம இருந்தாலும் நாட்கள் நகருவது நிற்குமா? கிளம்பும் நாளும் வந்தது. டண்டனக்கா டனக்கனக்கா.

ஓ… முக்கியமானது சொல்ல மறந்தாச்சே. நண்பர்கள் இருவரும் அவர்கள் பெயரை எழுதவேண்டாமின்னு கேட்டுக் கொண்டதால், நண்பர் 1 என அமெரிக்க நண்பருக்கும், நண்பர் 2 என இந்தியாவிலிருந்து வந்த நண்பருக்கும் பேர் வைத்துக் கொள்வோம். இவர்களோடு முக்கியமான புள்ளியும் சேர்ந்தார். அவர் தான் எங்களை வழி நடத்தி செல்பவர். அவர் பெயர் .....


Tuesday, July 22, 2008

பள்ளத்தாக்கு போட்டுத் தாக்கு


எங்கே போனோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….. அதை ஒரு வரில சொல்லனுமின்னா நானெல்லாம் இப்பிரமாண்டத்திற்கு முன் யாருன்னு கேக்க வைக்கும் இடம். தன்னையும் என்னையும் இணைக்க போராடாமல் வெல்லும் இடம். என்னாங்க சொல்ல வாரீங்கன்னு கேக்குறீங்களா? இருங்க இருங்க வந்துட்டேன்.

அருமையான மார்ச் மாத சில்லென்ற குளிரை அனுபவிக்க விடாது வேலைப் பளு குனிந்த தலை நிமிர விடாமல் அழுத்த, வேலை வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கேன். ஏப்ரல் மாதத்தில் மனசும் உடம்பும் போதுமடா சாமின்னு சோர்வடைய, மே மாத ரிசல்ட் சூப்பர். அப்பாட….. ஒரு வழியா நமக்கும் விடிவுகாலமின்னு மனசு தைய தக்கா ஆரம்பிக்குது. ஜூன் மாதத்திலே 5 நாளு லீவு எடுத்துக்கலாமின்னு அதிகாரி சிரிப்புடன் சொல்ல, அன்றைய இரவே எங்கே போகலாமின்னு முடிவு செய்ய முடிவு செய்தாச்சி. குழப்பமா இருக்கா…. இருக்கனுமில்ல….அப்படி என்ன தான் செய்ய போறேனோ…. மனசு துள்ளுது. நடை துள்ளுது. பரந்த நிலத்திலே வான்னோக்கி நின்னு ஓ-ன்னு கத்த ஆசை வருது. அட…. எங்கே போறோம்? புரிஞ்சிப் போச்சி. உலக (இயற்கை) அதிசயத்தில் ஒன்றான க்ராண்ட் கான்யன் என்ற பள்ளத்தாக்கில் உருண்டு புரள போகலாமின்னு முடிவு செய்ததும் உற்சாகம் கரை புரண்டு ஓடத்துவங்கியது.

மலையேறி 6 வருடமாச்சே. வயசாச்சே. உடம்பு ஒத்துழைக்குமா? நம்மால முடியுமா? அப்பப்ப கேள்விகள் வந்து போகுது. பின்ன…. ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் வீட்டுப் பெரியவர்கள் வந்துவிடவே நம் ஆவலை தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது. இந்த வருடம் அவங்களுக்கு அமெரிக்கா போரடித்துப் போகவே, நம் ஆவல் மெல்ல எட்டிப் பார்த்தது. ஏற்கனவே போன இடம் தான். ஆனால் செய்ய முடியாத, மிச்சம் வைத்திருந்த ட்ரெயில்ஸ் இந்த முறை முடித்தால் என்ன என தோணவே, அதற்கான ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாச்சி.

முடிவு செய்தா மட்டும் போதுமா? விடுமுறை கிடைத்த நாளே, கூகிள் ஆண்டவர் உதவியால எங்கே போகலாமின்னு ஒரு நோட்ஸ் எடுத்து, எந்த தேதியில எங்கே என்ன பண்ணலாம், எங்கே எத்தனை நாள் தங்கலாம் என்பதெல்லாம் மளமளன்னு கிறுக்கி வச்சாச்சி. கழுதைல ஏறி, கீழிறங்கவா? குதிரையில் ஏறி கீழிறங்கவா? இல்லை கால் நடையா கீழிறங்கி, பறவை மீதேறி மேல் வரவா? அப்பப்பா… என்னவெல்லாம் யோசிக்க வேண்டியிருக்குது. முன்னர் போனப்போ, கழுத மேல ஏற ஆசையா போய் கேட்டப்போ, அதுக்கெல்லாம் 18 மாசத்துக்கு முன்னாடி ரிசர்வ் பண்ணனுமின்னு சொன்னது ஞாபத்துக்கு வந்தது. ம்ம்… ரிசர்வேஷன் கிடைக்குமான்னு கவலை புதுசா வந்து தோள் மீது ஏறிக் கொண்டது இப்போது. என்னவானாலும் சரி தான். ஊர் சுத்துறதுன்னு முடிவு பண்ணியாச்சி. இனி அதில் மாற்றமில்லைன்னு மனசுல பதிய வச்சிட்டு, சனி, ஞாயிறு முழுசா(?) உட்கார்ந்து ஒவ்வொரு இடமா புக் செய்யும் வேலை ஆரம்பமாகியது. அப்பப்பா… ஏக கலக்கல் போங்க.

பட்டியல் போட்ட இடங்கள்
1) கிராண்ட் கான்யன் (பார்க்க)
2) சயான் கான்யன் (பள்ளத்தாக்கு இறங்க)
3) ப்ரைஸ் கான்யன் (பள்ளத்தாக்கு இறங்க)
4) அண்ட்டிலோப் கான்யன் (புகைப்படம் எடுக்க)
5) சரல் பாதையில், காட்டு வழி பாதையில், பாதையில்லா பாதையில், 4 கால் வண்டியில் (அதாங்க.. காரில்) 60 மைலுக்கு பள்ளத்தாக்கு (கான்யன் சுற்றி) வலம்.
6) பறக்கும் பறவையில் (அதாங்க ஹெலிகாப்டர்) 40 நிமிடம் கான்யன் வலம்
7) தண்ணீர் மிதவையில் காட்டுமாட்டுப் பயணம் (அதாங்க ஒயிட் வாட்டர் ராஃப்ட்டிங்)
8) ஹுலபாய் கிராமத்துக்கு 10 மையில் கரடு முரடு பாதையில் பள்ளத்தாக்கில் நடை
9) கழுதை ஏற்றம்
10) குதிரை ஏற்றம் இறக்கத்தில் (!)
11) ………..


அம்மாடியோவ்… இன்னும் பட்டியல் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே போகுது. இத்தனையும் எப்படி 10 நாளில் செய்ய முடியுமின்னு குழப்பம் இருக்கத்தான் செய்தது. என்ன? 5 நாள் எப்படி 10 ஆச்சின்னு பாக்குறீங்களா? சொல்றேன் சொல்றேன். என்னவெல்லாம் பார்த்தோம், எங்கேயெல்லாம் போனோமின்னு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிரும். பொறுத்துக்கோங்க மக்களே!

Friday, July 18, 2008

பிள்ளையார் சுழி


எல்லோருக்கும் வணக்கம். கொஞ்ச நாள் இந்த பக்கம் தலை வைக்கலையே…. சரி என்ன தான் நடக்குதுன்னு எட்டிப் பார்க்கலாமின்னா தமிழ்மண டெம்ளேட் மாறிப் போச். சரியான வலைக்குள் தான் வந்திருக்கேனான்னு எனக்கே சந்தேகம் வந்துருச்சி. மாறி ரொம்ப நாளாச்சோ? வராததற்கு பெருசா காரணம் ஒன்றுமில்லையப்பா…. நேரமில்லைன்னு நழுவலாம் தான்…. அது முற்றிலும் உண்மையில்லையே.

எல்லாம் சரிதான்…. இப்போ என்ன இந்தப்பக்கமின்னு யாரோ முணுமுணுக்குறது கேக்குதுப்பா….. இதோ வந்திட்டேன். எல்லாரும் என்னாச்சி ஏதாச்சி நல்லாயிருக்கீகளான்னு கேக்குறாங்க. முத்தக்கா ஒரு படி மேலே போயி… உங்களையெல்லாம் யாரு எழுத வர சொன்னா. வந்தது வந்தீக… ஒழுங்கா எழுதலாமில்ல… என்ன நெனச்சிட்டு இருக்கீங்கன்னு செல்லக் கோபம் காமிச்சாங்க. சரி.. என்னா எழுதுறதுன்னு மண்டைய பிச்சிக்காம…. துளசி டீச்சர் பயண கட்டுரையெல்லாம் எழுதி நமக்கும் சொல்லிக் கொடுத்தாங்களே.. அதையே நாம பின்பற்றலாமின்னு மண்டைக்குள்ள ங்கொய்யுன்னு கொடையுது. அதையே செய்யலாமின்னு இதோ வந்திட்டேன்.

எங்கே பயணம்? எத்தனை நாள்? என்ன கொடுமையிது சரவணான்னு சொல்ல வைக்கும் லூட்டி. என்ன இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்குன்னு சொல்ல வைக்கும் கொழுப்பெடுத்த வேலைகள். அதிரடி 10 நாள் செம ஜாலி. இதெல்லாம் கொஞ்சமா சொல்லலாமின்னு தோணுது. கண்டிப்பா துளசி டீச்சர் போலவோ, யாத்ரீகன் போலவோ அழகா கோர்வையா, படம் போட்டு சொல்லத் தெரியாதப்பா. ஏதோ எனக்கு தெரிஞ்ச அரைகுறை ஸ்டைல்ல சொல்லப் போறேன். உங்களுக்கு போர் அடிச்சா சொல்லிருங்க. நிறுத்திறலாம். சரியா? ஆங்… எங்கே போனோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… அடுத்த பதிவில் சொல்லட்டா?

Thursday, March 13, 2008

பனிக் குவியலா உப்பளமா?


நண்பனின் பனிக்கால கனவு – முதல் அனுபவம்

இதுக்கு முன்ன முதல் அனுபவம் எழுதப் போக… ஆளாளுக்கு 'என்னவோன்னு நெனச்சி உள்ளே நுழஞ்சிட்டேன். ஏமாத்திப்பூட்டிகளேன்னு' கண்ணீர் (??) வடிச்சிட்டாக…. அதனால ராசாக்களே ராசாத்திகளே.. ஒரு நண்பனின் கனவு நனவான கதைய இங்கே சொல்லப் போறேன்.

நண்பனுக்கு பனிக் காலம் பற்றிக் கேட்பதே பெரும் பொழுது போக்கு. எப்போ எங்கூருல பனி பெய்தாலும் புகைப்படங்கள் எடுத்து அவரை கடுப்படிப்பது என் பொழுது போக்கு. ஒரு நாள் இல்ல ஒரு நாள் நானும் பனியில் நனைவேன்னு அடிக்கடி என்னை நற நறப்பார். அவர் சொன்ன மாதிரி அவருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் அமைந்தது. வியாபார விஷயமாக முதன் முதல் வெளிநாட்டுப் பயணம். அமெரிக்காவிற்கு. அவர் வரும் காலம் கொட்டும் பனிக்காலம். வந்தவர் இறங்கிய இடம் நியூயார்க். நாங்கள் இருக்கும் இடமோ பொல்லாத பனிக்குவியும் இடம். அவர் வந்த அன்று அங்கே மழை. இங்கே பனி. அவருக்கு பெரிய ஏமாற்றம். பனியில் நனையாது ஊர் திரும்பிவிடுவோமோ?ன்னு கலக்கம். அடுத்த இரண்டு நாட்கள் அவருக்கு வேலை வேலை. மூன்றாவது நாள் அதிகாலை 3 மணிக்கு ஃபோன். 'எலேய்.. சூப்பரா இருக்கு. பனி பெய்யுது.' அப்படின்னு. (சும்மா பனித் தூறலுக்கே இப்படி…..) நானிருக்கும் இடத்திலோ பனி கொட்டிக்கிடக்குது. அவரின் குதூகலமான மன நிலையை கலைக்க விரும்பாமல் 30 நிமிட கதையை(!) அர்த்த ராத்திரியில்(?) கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவர் எங்கள் ஊருக்கு வரும் நாள் வந்தது. அன்று பனிப் புயல் அறிவிப்பு. 8 இன்ஞ்க்கு குவியப் போகுதுன்னு பேச்சு. ஏற்கனவே குவிந்து உறைந்து கிடக்கும் பனி போதாதா? இதிலே நண்பர் வரும் நேரம் வரை ஒன்றும் இல்லை என வானிலை அறிவிப்பாளர் காலையில் அறிவித்து விட்டார். அப்பாடா… நல்ல வேளை. அல்லது விமானத்தை இரத்து செய்துவிடுவார்களே. எதிர்பார்த்த நேரத்திற்கு விமானம் வந்துவிட்டது. ஓடுகளத்தில் இருக்கும் போதே டாண்ணு ஒரு ஃபோன் வருது. என்னடான்னு கூட ஆரம்பிக்கல. அதுக்குள்ள.. மூச்சு தெறிச்சி விழுற மாதிரி.. 'எலேய்.. ஏன் சொல்லல.. உங்க ஊர்ல உப்பளம் கொட்டி வச்சிருக்குறன்னு…. அப்படியே நம்ம ஊரை கண்ணு முன்னால கொண்டு வந்துருச்சிப் போ' ன்னு.. ஒரே சந்தோசத் திக்கு முக்காடல். 'விமானத்துல இருந்தவாறே போட்டோ எடுத்து தள்ளிட்டன்ல…. யப்பப்பா… மூச்சு முட்டுதப்பா… விமான ஓடுகளத்துல கூட ஆங்காங்கே குவிச்சி வச்சிருக்காங்க பாரு'ன்னு… கட கடன்னு கொட்டித் தீர்த்துட்டார். 'சரியப்பா.. இறங்கி வர்ற வழியப்பாரு'ன்னு ஒரு வழியா பேசி முடிச்சாச்சி.
நான் நண்பனை வரவேற்க மூட்டைமுடிச்சுகள் எடுக்குமிடத்தில் காத்திருந்தேன். ஓடி வந்து தழுவியவாறு 'ஏம்புள்ள சொல்லல. அப்படியே நம்மூரு உப்பளம் தான்'னு திரும்பவும் ஆரம்பமாச்சி அவரின் ஆனந்த புலம்பல். சரிதான்… இன்னக்கி இது முடியாது போலவேன்னு நெனச்சிட்டு….. 'சரியப்பா.. நடையக் கட்டு'ன்னு தள்ளிட்டுப் போக வேண்டியதா போச்சு. மூட்டைய எடுத்துட்டு வெளில வந்தா செம குளிரு. இவ்ளோ நேரம் விமான நிலையத்துள்ளே இருந்ததால் குளிர் பத்தி நெனச்சிப் பார்த்திருக்க மாட்டார் போல. 'அடிப்பாவி… இவ்ளோ குளிருமா.. இப்படியா? இந்த ஊர்ல நீ கண்டிப்பா இருக்க தான் செய்யனுமா'ன்னு… ஆரம்பமாகியது அடுத்தடுத்து கேள்விகள்.

ஒரு வழியா கார்ல ஏறியாச்சு. அடுத்த கேள்வியும் வந்தது. 1 சாக்லேட் கொடுத்த குழந்தையிடம் 5 சாக்லேட் கொடுத்தால். இன்னும் தருவாங்களான்னு பார்க்குமே. அது போல தான் இவரும். 'என்ன புள்ள….. இன்னக்கி பனி பெய்யுமின்னு சொன்ன. இன்னும் காணோமி'ன்னு கேள்வி. 'அடப் பாவி. இப்போ தானே வந்திருக்க'ன்னு சொன்னா.. ஒரு நமுட்டு சிரிப்பு. 5 மைல் வந்திருப்போம். பனி கொட்டு கொட்டுன்னு கொட்ட ஆரம்பிக்குது. 40 நிமிஷத்துல போக வேண்டிய வீட்டுக்கு 2 மணி நேரத்துல வந்து சேர்ந்தோம். அவருக்கு பனி மழையை பார்த்ததும் ஏக சந்தோஷம். புகைப் படம் எடுத்து தள்ளிட்டாரு, என்னென்னவோ பேசிட்டே. குழந்தையின் சந்தோஷத்தோட, கார் போற ஸ்பீடுக்கு இறங்கி நடந்துறலாமின்னு காமெண்ட் வேற.

மறுநாள் கொட்டும் பனியை வீட்டினுள் இருந்தவாறே டீ, பஜ்ஜியுடன் இரசித்தோம். அன்று பனி பெய்வது நிற்கவே, கையில்லா சட்டையுடன், உற்சாகமாய் காமிராவை என் கையில் கொடுத்தவர், க்ளிக்கித் தள்ளு பார்ப்போம் எனக் கூறி அவ்வளவு குளிரிலும், ஆட்டம் போட வெளியே (வீட்டின் பின்புறம்) கிளம்பிவிட்டார். நானோ நல்ல பிள்ளையாக 4 லேயரில் உடை உடுத்தி, குல்லா போட்டு (தலைக்கு தாம்ப்பா), உல்லன் சாக்ஸும், ஸ்னோ பூட் போட்டு, ஜாக்கெட் சகிதமாய் வெளியே வந்தால், வீட்டின் பின்னால் அழகான வெள்ளைத்தாளென இருந்த பனி இப்போது கசங்கிய சகதியாய் காட்சியளித்தது அவரின் குதியாட்டத்தால். அவரின் கொண்டாட்டம் எங்களையும் தொற்றிக் கொள்ள, எல்லோரும் சேர்ந்து ஆட்டம் தான். :-)

ஒரு வழியா அவர் இருந்த 5 நாட்களும் புதுப்புது இடங்களா போய் பனி மலையை (குவித்து வைத்த பனியைத் தான்) விதவிதமா கிளிக்கித் தள்ளிட்டார். நண்பருக்கு கனவு நனவான சந்தோஷம். நமக்கோ சொல் பேச்சுக் கேட்டாத ஒரு குழந்தையை பத்தி மேய்ச்ச களைப்பான சந்தோஷம். நண்பரின் குதூகலம் எங்களையும் தொற்றிக் கொண்டது என்பதை கூறவும் வேண்டுமா?

பின்குறிப்பு:
யாத்ரீகன் கூல் பதிவில்(http://yaathirigan.blogspot.com/2008/03/coooool.html), அவருடைய புகைப் படம் ஒன்றைக் காணப் போய், இந்த பதிவு உருவானது. நன்றி யாத்ரீகன்.

Monday, March 10, 2008

சிலுசிலுப்பு குச்சி

சிலுசிலுப்பு குச்சி

கொண்டை சேவல் கூவுமுன்
குடுமி முடி தான் முடிந்து
பலாப்பட்டி தலை சுமந்து
பள்ளி சேர்த்த மக்களை
காணச் சென்றார்
கோவணாண்டி தாத்தா

ஒரு பையில் முறுக்கும், கொழுக்கட்டையுமாய்
மறு பையில் சீடை, அதிரசமுமாய்
புதுத் துணி எடுத்து
பட்டணத்து விடுதிக்கு
ஆசையுடன் வழி நடந்தார்
காட்டு வழிப் பாதையிலே

ஒத்தையடிப் பாதையிலே
ஊர் ஒன்று தாண்டிடவே
கிண்கிணி மணியோசை
திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தார்
கண்ட காட்சிக்கு
அதிசயித்து இலயித்திருந்தார்

பச்ச புள்ளக ஓடிவர
கூவி அழைத்து காசு வாங்கி
ஜாலம் செய்து
வித்தை காட்டி
குழந்தைகளை மகிழ்வித்தான்
ஐஸ் வண்டிக்காரன்

வியப்பு மேலிடவே
புதுப் பட்சணமாய்
தோன்றிடவே
ஏதென அறிய
தயக்கமாய் பக்கம் சென்றார்
பட்டிக்காட்டு தாத்தா

ஓரக் கண் பார்வையுடன்
பொட்டி அதனை அவன் திறக்க
சிலுசிலுப்பாய் வெண்புகை
பதறி ஓரடி
பின்வாங்கினார்
எங்க தங்க தாத்தா

விடுதி சென்ற மக்களுக்கு
புதுப் பட்சணம் காண்பிக்க
காசு கொடுத்து இரெண்டு வாங்கி
முண்டாசில் முடிந்து
வீறுநடை நடந்தார்
மிதப்புடனே

பெருமிதமாய் விடுதி சென்று
சிலுசிலு நீர் காதோடு வழிய
ஓடி வந்த மக்களை அள்ளியபடி
அணைத்து முத்தமிட்டு
முண்டாசு அவிழ்த்தார்
மக்கள் முன்

ரெண்டு, குச்சி மட்டும் அதிலிருக்க
சிலுசிலுப்பும் அடங்கியிருக்க
திருதிருவென புரியாது
விழி தாழ்த்தி
அயர்ந்தாரே
அப்பாவி தாத்தா!

பின்குறிப்பு:
இது உண்மை சம்பவம். அம்மாவும், மாமாவும் பக்கத்து ஊரில் படிக்க அனுப்பி வைத்த தாத்தா, ஒரு முறை அவர்களை காண வரும் போது நடந்த கதை இது. அம்மா கதை சொல்ல, அதன் வடிவம் தான் இங்கே. இது போல சம்பவங்கள் உங்களுக்கும் நடந்திருக்கும். பகிர்ந்து கொள்ளலாமே; பதிவாகவோ. பின்னூட்டமாகவோ.)

Sunday, March 09, 2008

நாங்களும் சின்னவங்களாயிட்டோம்

சின்ன புள்ளையா இருக்குறச்சே படிச்ச பாடமெல்லாம் மறக்காம இருக்கனுமின்னு டீச்சர் வீட்டுப்பாடம் கொடுத்தாங்க. முதல் பாட்டு ஞாபகத்துக்கு வர தான் மூளைய கசக்க வேண்டியதா இருந்துச்சி. அப்புறமா எல்லாரும் வரிசை கட்டி நிக்குறாங்க. சரியா செய்திருக்கேனான்னு பார்த்து சொல்லுங்கப்பா. சரியா இல்லைன்னாலும் ‘பார்த்து’ மார்க் போடுங்க. வயசான காலத்துல இப்பிடி முதியோர் கல்வி கற்க வச்சிட்டீங்களே. :-) அசை போட நல்லா தான் இருந்தது.





கண்ணே மணியே முத்தம் தா
கட்டிக்கரும்பே முத்தம் தா
வண்ணக் கிளியே முத்தம் தான்
வாசக் கொழுந்தே முத்தம் தா
மானே தேனே முத்தம் தா
மடியில் வந்து முத்தம் தா




ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரித் தண்ணி கலக்கும் ஆனை

(இதுக்கு மேல தெரியல)



தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று




கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு
பாடும் குயிலே கைவீசு
பைய போகலாம் கைவீசு
பழத்தை வாங்கலாம் கைவீசு
பகிர்ந்தே தின்னலாம் கைவீசு






காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா
கிளியே கிளியே பிள்ளைக்கு பால் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா





பின் குறிப்பு:

இந்த பதிவு பள்ளிக்கூடப் பாட்டுப் போடச் சொன்ன எங்கள் கண்மணியக்காவுக்காக

Wednesday, February 27, 2008

மரணத்தின் சுவடுகள்


மரணத்தின் முதல் அறிமுகம். பாட்டியம்மா… ஏதும் அறியா சிறு வயது. என் வயதொத்த சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட ஏற்றார் போல் பெரியவர்கள் துணையில்லா அக்கணம் மகிழ்ச்சியையே தந்தது. பரிட்சயமில்லா உறவுகள். முதலில் பயம். ஏன் இந்த கூப்பாடு என்று. அம்மாவின் கண்ணீர் அமைதியா இருக்க சொல்லியது.

இரண்டாம் அறிமுகம் தாத்தா. என் துறு துறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாது எதற்கெடுத்தாலும் திட்டும் என் தாத்தா. விவரம் புரிந்த வயது. 2 நாட்களாக காத்திருந்த மரணம். மரணத்தை வரவேற்றுக் காத்திருந்தது விளங்காத இளம் மனசு. இடைவிடாது ஒலித்த தொலைப்பேசி அச்சுறுத்தியது. ஊரிலிருந்து வந்த அப்பாவின் கதறலில் அரைகுறையாக புரிந்தது.

மரணத்தின் பயம் புரிந்த வயதில் மூன்றாவது/நான்காவது/ஐந்தாவது மரணங்கள். மூவரும் மனதுக்கு மிக மிக நெருக்கமானவர்கள். மரணம் எப்படி அறிவிக்கப்பட்டது? திடீரென்று, ஒரு நடுநிசியில், சில்லென ஊடுருவும் பனிப்பொழுதில், தொலைபேசி அழைப்பில், வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் போதே மனசு பக்பக் என பதறும் போது. தொண்டைக் குழியில் போராட்டம் நடக்கும் போது. உரையாடலின் கரு புரியத் துவங்கும் போது, மனம் தன்நிலை கொள்ளாது பயணிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் நடுநிசியில் தொலைப்பேசி ஒலித்தால் மனம் திடுக் திடுக்கென அதிரும். தொலைப்பேசியின் ஒலியும், அதனூடே கொண்டுவரும் செய்தியும் இது தான் என மனம் நம்பத் துவங்குகிறது.

வார்த்தைப் பிரயோகத்திலே உள்ளும் புறமும் நடுங்க ஆரம்பிக்கிறது. மனதிற்கருகிலா பிறர் மரணத்தை கேட்கும் போதோ அது செய்தியாகி போய்கிறது. சுவடுகள் ஏதுமில்லா மரணமாகிப் போகிறது. சில மரணம் கேள்விகள் பிறப்பிடமாகிறது. சில மரணம் விலகி நின்று பார்க்க வைக்கிறது. சில மரணம் நம்மை சீண்டிப் பார்க்கிறது. புத்தகம் சொல்லும் ஏதும் உண்மையில்லாமல் போகிறது. வார்த்தைகள் ரசனையற்றதாக போகிறது. ஏன் மரணம் மட்டுமே பல முகம் கொண்டதாக தெரியப் படுகிறது?

மரணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி என அறிந்திருந்தும், மரணத்தை வென்றுவிட ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. வாழ்க்கையின் சுவைதனை அறிந்த பின்னரும் மரணம் எதிர்கொள்ள முடியா எதிரியாகவே தெரிகிறது. நம்முடனே பிறந்து, நம்முடனேயே வளர்ந்து, கடேசியில் நம்மை முந்திக்கொள்கிறது மரணம்.

மரணமும், அது குறித்தான பயமும் ஏன்? அது அறியப்படாத இரகசியமாக இருப்பதாலா? நம்முள் இருந்து, நம்மை வெல்வதாலா? அதன் சுவையை உணர வேண்டினாலும், நம்மால் முடியாது போவதாலா? மரணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நம் மனம், மரணம், தன் மிச்சமாக, எதையாவது விட்டுச்செல்கிறது எனக் கொள்கிறது. மீளாத் துயரம், அழுகை, தன்னிரக்கம், ஏக்கங்கள், பிரிவுத் துயர், இன்ன பிற. மரணத்தை ஏற்கும் வரையில் தான் அதன் தொடர்ச்சியாக இவை அனைத்தும் இருக்கும் என்பதை மறுக்கிறது. அழுகையின் சுவடு ஆரம்பிக்கும் முன்பே முடிந்து போகிறது. மீளாத் துயர் மீளும் போது குற்றவுணர்வு ஆட்டிப் படைக்கிறது. தன்னிரக்கம் விலகும் போது தலை நிமிர்ந்து மரணத்தை பார்க்க முடிகிறது. ஏக்கங்கள் வேற்றுரு கொள்கிறது. ஆக மரணத்தின் சுவடுகளாய் சித்தரித்தவை யாவும் மரணத்தின் சுவடுகளே அல்ல என்றாகிறது.

மரணத்தை ருசிக்கும் எண்ணம் மெல்ல தலை தூக்க ஆரம்பிக்கிறது. அதன் மேல் ரசனையும், மாய சுழற்சியும் வந்து போகிறது. நெருக்கமானவர்களின் மரணத்தைக் கூட ஒட்டுதல் இல்லாது காண ஆயுத்தமாகிறது. மரணத்தை இரசிக்கும் வேளையில், மரணம் பிறப்புக்கு சமானமாகிறது. விகாரமாய் தெரிந்த மரணம் வியப்பான பிறப்பாகிறது. சுவடே இல்லாத பாதையாகிறது.


பின்குறிப்பு:
இக்கட்டுரை என் ஆருயிர் தோழிக்கும், அவள் போல மரணமடைந்த எல்லாருக்கும், இனி மரணிக்கப் போகும் எனக்கும் சமர்ப்பணம்.

Monday, February 18, 2008

கயிற்றுக் கட்டில்


நள்ளிரவு
கயிற்று கட்டில்
வானம் பார்த்து நான்
என்னவள் என்னருகில்

அவள் நிலா காண
அல்லி மலர்ந்து நறுமணம் வீச
என் மனம் கிறுகிறுக்க
நாடி நரம்பு முறுக்கேற

ஊணுடல் உரச
பற்றி கொண்டது தீ
ஊணுடல் மறைய
ஈருயிர் ஒன்றானது

நிலா பெண் நாணி முகம் மூட
முகிலினம் வெட்கத்துடன் சிணுங்க
நட்சத்திர நங்கைகள் கண் சிமிட்ட
வானம் இருளை வாரி இறைத்தது

இக்கணம் கண்ட சூரியனார்
கரிய வானம் தீண்ட
அடி வானம்
செவ்வானம் ஆனது

இது கண்டு என்
கண்மணி கண்விழிக்க
நெகிழ்ந்த தன் நிலை கண்டு
நாணி தலை கவிழ

வேகமாக கை நிலை திருத்த
என் கைகள் தடுக்க
அரங்கேறியது
மிச்சமிருந்த ஆசைகள்

- காட்டாறு

Tuesday, February 12, 2008

களைதல்


களைதல்

சுயம் அறிய சுயம் இழக்க
சுயம் தாங்கி சுயமாய்
சுயம் இழந்து சுயம் பெற
அலைபாயும் மனதுடன் ஒரு பயணம்

பிளக்கும் வெயிலில்
வரண்ட நாவும்
வெடித்த உதடுமாய்
திரு அண்ணலின் வலம்

தேய்ந்த கால்மிதியில்
மரத்த உள்ளத்தில்
கிழிந்த சதையில்
உயிர்ப்புடன் வழியும் குருதி

காயும் பருப்பு சோறும்
களியும் கோள உருண்டையும்
திரு ஓடு ஏந்தி தினம்
பிச்சை சாப்பாடு

ஊடுருவும் மெல்லிய இசையில்
பித்து பிடித்து வெளி ஆட
ஆடி அடங்கிப் போனது
உளமென்னும் குரங்கு

ஓலைப் பாயின் கிழிசலில்
பிண்டமொன்று உடன் உறங்க
வெட்டியான் ஓலத்தில்
ஒடுங்கிப் போனது நாடி

மேலோங்கிய நெருப்பில்
விரைத்து எழும் பிணம்
வெட்டியின் அடியில்
உள் வாங்கும்

உறுத்துக் கண்ட மனம்
வலியில் கழண்ட மேனி
சுயமாய் சுயம் களைந்தது
எல்லாம் புரிந்து தான் போனது

கிழிந்து விழுந்த முக மூடி
பித்து நீங்கிய சித்தம்
சிவனில் கலந்த சக்தி
தொலைத்ததால் புரிந்ததோ தேடலின் பொருள்


விரிந்த விழியில் விரிந்து போனது உலகம்!

Tuesday, February 05, 2008

தலைகீழா தொங்க விட்டுட்டாங்க டோய்


பயம் என்பது மனிதனை ஆட்டிப் படைக்கும் ஆட்கொல்லி. பயத்தை போக்க பயம். இதை வாழ்க்கையின் மையமாக வைத்தே நெறையா மக்க மனுசங்க வாழ்ந்துட்டு இருக்காங்க…. எதுக்காக பயம் வருதுன்னு ஒவ்வொருத்தரையும் கேட்டுப் பாருங்களேன். சரியா பதில் சொல்லத் தெரியாது. எங்க வீட்டு 12 வயது சொல்லியது எனக்கு பேய் கதை கேட்டால் பயமின்னு. 4 வயது சொல்லியது நான் பந்தை உடைத்தால் அப்பா அடிப்பாரேன்னு பயம். 25 வயது சொல்லியது அவள் என்னை மறுத்துவிடுவாளோன்னு பயம். 40 சொல்லியது பக்கத்து வீட்டு தங்கமணியை ரசிக்கிறது எங்கூட்டு தங்கமணிக்கு தெரிஞ்சிருமோன்னு பயம். 64 சொல்லியது என்னோட கடேசி மகனின் திருமணத்தை பார்க்காமலே செத்துப் போயிருவேனோன்னு பயம். 89 சொல்லியது நான் செத்துப் போனா உனக்கு சொல்லியனுப்பாம போயிருவாங்களோன்னு பயம். இப்படியே எதுக்கெடுத்தாலும் பயம். அட எதுக்கப்பா இப்படியெல்லாம் பயப்படனுமின்னு எனக்கு தோணும். சரி… அது நாம். :-) இப்போ எதுக்கு இப்படி நீட்டி முழக்கிட்டு இருக்கேன்னு கேக்குறீங்களா… ஊரிலிருந்து வந்த என் தோழிக்கு நம்ம தெனாலியை விட ரொம்ப ரொம்ப பயம். அவுங்க முன்னாடி நின்னுட்டே… ப்ப்பன்னு சொன்னோமின்னாலும் திடுக்கிடுவாங்க…. இவங்க வந்து ஒரு அபாயகரமான (?) அனுபவத்தை/நினைவுகளைத் தூண்டி விட்டுப் போனாங்க. எனக்கும் அதை பதிவா தர ஆசை வரவே… உங்க கழுத்தை அறுக்க கிளம்பிட்டேன்.

8 ஆண்டுகளுக்கு முன்……. டண் டண் டண் டண் டைங்க்…. 7 தோழ தோழியர்கள் சேர்ந்து பன்ஜி ஜம்பிங் (bunjee jumping) போகலாமின்னு கிளம்பினோம். 1 மாதத்துக்கு முன்ன புக் செய்து….. அதோ இதோன்னு எதிர்பார்த்த நாளும் வந்திருச்சி. வீர தீரமா கிளம்பியாச்சி. ஆனா மனசு திக் திக்குனு அடிக்குது. ஓவர் ரவுசு பண்ணுறவங்க கூட அமைதியா வர்றாங்க. நாங்க இருந்த இடத்திலிருந்து 2 மணி நேரப் பயணம். அந்த இரண்டு மணி நேரமும், எப்போதும் ஊர்சுற்றும் போது இருக்கும் துடிதுடிப்போ, கொள கொளா வளவளா பேச்சோ இல்லாமல் காரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து மனசு துடிச்சிட்டு இருக்குது. எப்படா ஊர் வந்து சேருமின்னு இருக்குது. கை காலெல்லாம் ஜில்லுன்னு இருக்குற மாதிரி தோணுது. இத்தனைக்கும் நாங்க போனது கோடை காலத்திலே.

ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்தோம். அங்கே கூடி இருந்த மக்கள் எல்லாருமே கொஞ்சம் அமைதியா இருக்குற மாதிரி தெரிஞ்சது. என்னோட மன ப்ரம்மையா கூட இருக்கலாம். ஏற்கனவே வலைகளில் தேடிப் பிடித்து பன் ஜி ஜம்பிங் படித்திருந்தாலும், இப்போ நேர்ல பார்க்கும் போது அப்படியே இதயமே வெளில வந்துவிடுமோன்னு ஓவர் ஃபிலிங்க்ஸ். இதிலே 2 பேரு காசு போனாலும் பரவாயில்லைன்னு வரமாட்டேன்னு அடம் பிடிச்சிட்டாங்க. அவங்களை சமாதன படுத்துற மனநிலைல யாரு அங்கே இருந்தாங்க? அதான் எல்லாருக்குமே மனசு எகிறி குதிச்சிட்டு தானே இருக்குது. எங்கள் முறை வந்தது. வீராதி வீரன் எங்கள் குழுவிலே சின்னவன் நான் முதல்ல போறேன்னு ஜம்பமா கிளம்பினான். பிறகு தான் தெரிஞ்சது பயத்திலே அப்படி உணர்ச்சி வசப் பட்டுட்டானாம். இடுப்பிலே பட்டையா ஒரு கயித்தை கட்டினாங்க. அப்புறம் அந்த கயிற்றின் ஒரு முனை தொடையை சுற்றி கெண்டைக்காலில் முடிந்திருந்தது. மற்றொரு முனை நீள கயிற்றில் மாட்டிவிடுவதற்காக சற்று லூசாக இருக்குது. நம் முறை வந்ததும், ஒரு அக்கா (அழகான பெண்மணின்னு சொல்லியிருக்கனுமோ) நம் இடுப்பில், கெண்டைக்காலில் கட்டிய முடிச்சிகள் சரியாக இருக்குதான்னு பாக்குறாங்க. அப்புறம் க்ரேன் வந்து பக்கத்தில் நிக்குது. அதுக்குள்ள தள்ளி விடுறாங்க. க்ரேனில் இரண்டு ஹண்ட்சம்ஸ் இருக்குறாங்க. அரைக்கால் உடுப்பில் கையில்லாத சட்டையில், பச்சை குத்திய புஜங்களை காண்பித்துக் கொண்டு சிரிப்புடன் உள்ளே வரவேற்றார்கள். க்ரேன் கீழிருந்து 300 அடி மேலே செல்லும் வரை நம்மிடம் பேச்சு கொடுத்துக் கொண்டும், விளக்கங்கள் (நாம் கேட்காமலே) சொல்லிக் கொண்டும் வருகின்றனர். இன்னக்கி வரை என்ன பேசினாங்கன்னு முழுசா எனக்கு தெரியாது. முதல் முறையா உங்களுக்கு அப்படின்னு அவங்க கேட்டதும், பூம்பூம் மாடு மாதிரி கண்கள் உருட்டியது மட்டும் ஞாபகம் இருக்குது. சின்ன சின்ன தகவல்கள் ஞாபகம் இருக்குது. மத்தமடி எல்லாமே காற்றோடு காற்றாய்…

முதலாமவன் குதித்தாயிற்று. அதற்குள் எனக்கு முன்னால் நின்ற நண்பனும், நானும் ரெடியா இருக்கோம். எனக்கப்புறம் இன்னும் இருவர் எங்கள் நண்பர்கள். எப்படி தப்பிப்போமின்னு இது வரை கணக்கு போட்டுட்டு இருந்த மனம், இப்போது எப்படா முடியுமின்னு கணக்குப் போட ஆரம்பிச்சிருச்சி. இரண்டாவதாக குதித்தவன் சரியாக(?) விழாததால், வானத்தில் குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருக்கிறான். கயிறு வேகமாக சுற்றுகிறது. எனக்கு முன்னால் போனவனுக்கா இந்த நிலமை வரணும். அதைப் பார்த்ததும் என்னோட கால் கையெல்லாம் கழண்டு தனித் தனியா விழுற மாதிரி கொள கொளன்னு இருக்குது. தலை ஒரு பக்கமும், கீழே ஒரு பக்கமும் பிளந்து நிக்கிற மாதிரி இருக்குது. நாபிலேயிருந்து என்னவோ உருண்டு அப்படியே வாய் வழியா வெளில வருவது மாதிரி இருக்குது. பின்மண்டைல யாரோ சம்மட்டியால அடிக்கிற மாதிரி இருக்குது. முன்மண்டைல யாரோ குடையிற மாதிரி இருக்குது. கண்ணெல்லாம் பிதுங்கி வெளில வந்துருமோன்னு இருக்குது. முன்னால் இருந்தவன் எப்போ இறங்கினான், நான் எப்போ க்ரேனில் ஏறினேன்னு தெரியல. ஏதோ தள்ளிக் கொண்டு போய் விட்ட மாதிரி இருக்குது. ட்ராகன் பச்சை குத்தியவன், என் கைகளை எடுத்து தன் கைகளில் அடக்கிக் கொண்டு, தைரியம் சொல்ல ஆரம்பித்தான். நானும் ஏதேதோ உளறிக் கொண்டே தான் இருந்தேன். 300 அடி மேலே மெல்ல ஊர்ந்து வந்த க்ரேன் போலவே என் மனசும் மெல்ல மெல்ல பயம் தெளிந்து புது அனுபவத்திற்கு தயாராகியது. பயத்தை நாம் வெல்லும் வரை தானே பயத்திற்கு மரியாதை. வென்றதும் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடுமல்லவா. அது போல 300 அடி உயரத்திலிருந்து கீழே விழுகையில் சிறு கயிறு மட்டும் தாங்கிக் கொள்ளும் நம்மை என்ற தைரியத்துடன் குதிக்க நான் ரெடி. அப்போ நீங்க?

இளைஞர்கள் ஆல் த பெஸ்ட் சொல்லி முதுகில் சின்ன புஷ். க்ரேனில் இருக்கும் போது சின்ன சின்ன தகவல்கள் சொல்லியிருந்தாங்க. அவங்க லேசா தள்ளியதும், நான் தலை குப்புற விழ ஆரம்பித்தேன். விழும் போது கண்களை அகலத் திறந்து சுற்றியுள்ளவற்றைப் பார்த்தாலும், ஒன்னுமே பார்க்கவில்லை. :-) படக்குன்னு சுண்டி விட்ட மாதிரி ஒரு லெவல் வந்ததும் கயிறு நின்னு வலமும் புறமும் ஆட ஆரம்பிச்சது. அதே நேரத்திலே பயமும் அறவே போயிருச்சி. நான் தலைகீழாக தொங்க, இப்போது கயிறு வலமும் இடமுமாக ஆடுகிறேன். பெண்டுலம் போல இருக்குது. நான் கைகள் இரண்டையும் விரித்தவாறு மெல்ல பறப்பது போல் இருந்தது. என்னில் உள்ளுறுப்பு, வெளியிறுப்பு என்ற நிலை மாறி விட்டது. கயிறு ஒரு நிலைப்பட்டதும், காற்றிலே இரண்டறக் கலந்த மாதிரியும், நானும் இயற்கையும் வேறல்ல மாதிரியும், ஒருவித லகு தன்மை தொற்றிக் கொண்டது. எதுவுமே பாரமா இல்ல. மனசு லேசா இருக்குது. உடல் லேசா இருக்குது. காற்றாய் நான் மாறிவிட்டேன். 37 செகண்டு தான் இந்நிலை இருக்குமின்னு சொன்னாங்க. ஆனா எனக்கு ஒரு யுகமே கழிந்த மாதிரி இருந்தது. நான் அன்று அனுபவித்த அக்கணங்கள்…. அன்று என்னுடன் இருந்த ஏகாந்த நிலை….. ம்ம்ம்…. இன்று அழியா நினைவுகள் ஆகிவிட்டன.

கயிறு அசைவது நின்றதும், தலைகீழாக தரைக்கு வந்ததும், வாழ்த்தி அனுப்பிய பெண்மணி என்னிடம் வாஞ்சையுடன் கதை கேட்டதும், மேல் கட்டியிருந்த கயிறு அவிழ்க்கும் வரை மனதில் கொண்ட அமைதியை பிடித்து வைத்திருந்ததும், தன் நிலை வர 20 நிமிடங்கள் ஆகியதும், எனக்கு அப்புறம் செல்ல வேண்டிய 2 நண்பர்களும் ஓடி ஒளிந்து கொண்டதும் விவரிக்க ஆரம்பித்தால் பதிவு பெருசா ஆயிரும். அதனால இப்போ வீடியோ பாருங்க.

http://youtube.com/watch?v=lVBcCvsQ8bM&feature=related
http://youtube.com/watch?v=Y1soPMxNCLE
http://youtube.com/watch?v=nj8mumkOY78&feature=related

பின்குறிப்பு:
விளையாட நெறையா செலவு செய்ததால, வீடியோவுக்கு அந்த அளவு பணம் கொடுக்க வசதியில்லாமல் போயிருச்சி. அதனால இரவலா யாரோ ஒருவர் செய்த பயணத்தை யூ ட்யூபில் கடன் வாங்கி உங்களுக்கு தருகிறேன் மக்களே. ஏமாத்திட்டேன்னு நெனக்காதிங்க.

Friday, February 01, 2008

தோழியவள் சிரிப்பு

தோழியவள் சிரிப்பு


களங்கமில்லா சிரிப்பு
கலங்கடிக்கும் சிரிப்பு
தோழியவள் சிரிப்பு
எனக்குள் சிலிர்ப்பு

சிரிப்பின் உள்ளிருக்கும் துடிப்பு
துடிப்பு ஏற்படுத்தும் கிறுகிறுப்பு
அவள் உதிர்க்கும் சிரிப்பு
பத்திரமாய் காதினருகே

குழந்தையின் கொஞ்சல்
குமரியின் சிணுங்கல்
இயற்கையின் ரசிப்பு
தோழி, உன் சிரிப்பு

கள்ளமில்லா சிரிப்பு
பட படக்கும் பட்டாம்பூச்சியாய்
வெட்கமே மையமாய்
கூத்தாடும் நெஞ்சம் ஆனந்தமாய்

ஒதுங்கி நின்றக் கூரையில்
சில்லெனக் காற்றில்
சில துளி மேனி தொட
சிலிர்க்கும் மனம் போல

சாரலை அள்ளி அடக்க
தவிக்கும் உள்ளம்
விட்டு ஓடவே
தடுமாறும் எண்ணம்

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பாய்
தோழியவள் சிரிப்பில்
எனை நீ காண்பாய்

இதழ் விரிய சிரித்திடுவாள்
என் நங்கை
அவள் அனைவரின் உள்ளங்கவர்
நல் மங்கை

-- காட்டாறு

Tuesday, January 29, 2008

அன்பின் மாதம் ஆரம்பம்

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியை காதலர் தினமின்னு சொன்னாலும் சொன்னாங்க எந்த கடைக்குப் போனாலும் சிவப்பு கலரில் விதவிதமான பொம்மைகளும், இதயமும் தான். கடந்த வருடம் என்னோட அமெரிக்க நண்பர்களிடம் இது குறித்து விவாதித்த போது அவங்க சொன்னது என்னான்னா... இந்த தினத்தில் நம் அன்பை (காதலை மட்டுமல்லாது) நம் பெற்றோருக்கும், தோழ தோழிகளுக்கும். சகோதர சகோதிரிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளலாம். காதலர் மட்டுமென்று எடுத்துக் கொள்ளக் கூடாதுன்னு. அப்படியா? அன்பை பரிமாற தனியாக ஒரு தினம் வேண்டுமா? சொல்லுங்க மக்களே. இந்த கேள்விக்கும், இந்த பதிவிற்கும், இந்த தலைப்பிற்கும் சம்பந்தம் கிடையாது. எனினும், ஒருவரை ஒருவர் அன்பு செய்து இந்த அன்பின் மாதத்திலும் வாழ்வோம்.

இப்போ கதைக்கு வருவோம். பறவைகளை கவனிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச பொழுது போக்கு. காலைல எழுந்ததும் கீச் கீச் கேட்கும் போது ஒரு புத்துணர்ச்சி வரும் பாருங்க. அனுபவிச்சவங்களுக்கு நான் சொல்லுறது புரியும். (நானெல்லாம் இந்த கீச் கீச் கேட்டுட்டே அடுத்த ரவுண்டு தூங்கிருவேன். உண்மையை சொல்லிட்டேனப்பா). பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதமின்னு பாட்டு கேட்டிருக்கிறோம். அது எத்தனை உண்மைன்னு அவங்களை உன்னிப்பா கவனிச்சா புரியும். அவைகள் நமக்கு கற்று தரும் பாடங்கள் ஏராளம். கலர் கலரா, வித விதமான சைஸ், ஷேப்களில், கூக் கூக் சத்தங்களிலும் வித விதமாய். அப்பப்பா... தூரமா இருந்து பார்க்கும் போது அவைகளும் நம்மை கவனிக்காத மாதிரி இருக்கும். அவர்கள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது ஒருவித காப்புணர்ச்சியுடன் இருப்பது தெரியும். பக்கத்தில் போனா என்ன ஆகுமின்னு நான் சொல்ல வேண்டியதில்லை.

ராபின்ன்னு ஒரு பறவை நம்மூரு ஊர்க்குருவி மாதிரி ஆனா கொஞ்சம் பெருசா இருக்கும். சிறு தானிய வகைகள் கொடுத்தால் தினம் நம் வீட்டின் முன் ஆஜர் ஆகி விடும். அதே பறவை தான் தினம் வருமான்னு எனக்கு தெரியாது. ஆனா அவற்றை பார்க்கும் போது உற்சாகம் வருவது உண்மை.

ஸ்டார்லிங்-ன்னு ஒரு பறவை. பெரும் கூட்டமா தான் இருக்கும். சர் சர்ன்னு எங்கேயோ திரும்பி 2 முறை பறந்துவிட்டு அப்புறமா வேறு திசையில் பறந்து போயே போயிரும். எதுக்காக அப்படி செய்துன்னு எனக்கு புரியல. காத்திருந்து பார்ப்பவர்களை ஏமாற்றுகிறதோ?

கார்டினல் பத்தி பேசலைன்னா இந்த பதிவு முழுமை பெறாது. அவ்ளோ அழகு. அருமையான குரல். இது தான் தினமும் என்னை எழுப்பும் அலாரம்.

பறவைகள் பத்தி பேசினா பேசிக் கொண்டே போகலாம். அதனால இதோ உங்கள் பார்வைக்காக சிறு விடியோ.

Saturday, January 26, 2008

எங்க ஊர் கார் திருவிழா

எங்க ஊர்ல ஒவ்வொரு வருடமும் ஜனவரி 19 ஆரம்பித்து 27 வரை கார் திருவிழா நடைபெறும். இந்த 9 நாட்களும் ஜே ஜேன்னு திருவிழாக் கோலம் தான். பல வருடங்களாக நடைபெற்று வரும் இந்த விழாவிற்கு, கார் மோகம் கொண்டவர்கள் மட்டுமல்லாது வேடிக்கை பார்க்க நினைக்கும் எல்லாருமே வருவாங்க. வயது வித்தியாசமில்லாது அனைவரும் கண்டுகளிப்பதைப் பார்க்க அருமையாக இருக்கும். 1907 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திருவிழா, இரண்டாம் உலகப்போரின் தற்காலிகமாக 1941 முதல் 1953 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 1953-இருந்து இன்று வரை தங்குதடையில்லாமல் நடைபெற்று வருகிறது.

கோபோ ஹால் எனப்படும் 2.4 மில்லியன் சதுரடி கொண்ட இடத்தில் வருடாவருடம் நடக்கும் இந்நிகழ்ச்சியினால் 500 மில்லியன் டாலர் வருமானம் வருவதாயும், பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாயும், குழந்தைகள் நல்வாழ்விற்கு கடந்த ஆண்டு 6 மில்லியன் டாலர் கொடுத்ததாயும் இந்நிகழ்ச்சியை நடத்தும் NAIAS (North American Internationa Auto Show) நிறுவனத்தர் கூறுகின்றறர்கள். இவ்வாண்டு 86 கார் கம்பெனிகளும், கார் பாகம் தயாரிக்கும் கம்பெனிகளும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கார் கம்பெனிகாரர்களும் புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்வாங்க. இதில் அடுத்த வருட வெளியீடுகளும் (production cars), 10 வருடம் கழித்து இப்படியும் இருக்கலாம் என யூக வெளியீடுகளும்(Concept cars) அடங்கும். யூக வெளியீடுகளை விவரிக்க பெண்மணிகள் இருக்காங்க. (எங்கெயிருந்து தான் பிடிச்சிட்டு வருவாங்களோ? ரொம்ப சிம்பிள் இவங்களெல்லாம்...). இவங்க பேசும் பேச்சைக் கேட்பதற்கே வரும் கூட்டமும் இங்குண்டு. ;-) ஒவ்வொரு கம்பெனிக்காரர்களும் விளம்பரத்திற்காக செலவிடும் பணத்தை சொன்னால் கண்டிப்பா மயக்கம் தான்!

வருடா வருடம் பார்ப்பினும் சலிக்காத ஒரு நிகழ்வு எனக் கூறலாம். பிரமிக்க வைக்கும் விளம்பரங்கள், போட்டிகளின் உச்சத்தில் உருவான கார்கள், அவற்றின் பெருமைபாடும் சிட்டுக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கால்வலி பொருட்படுத்தாது சுற்றி சுற்றி வந்து புகைப்படம் பிடிக்கும் மக்கள் கும்பல்.... அப்பப்பா சொல்லி மாளாது. இதையெல்லாம் பார்த்தப்போ மனதில் தோணினது நெப்போலியன் சொன்ன வரிகள் தான் Imagination rules the world. No doubt about it! அங்கே எடுத்த எனக்குப் பிடித்த கார்களின் புகைப்படங்களை பார்த்து மகிழுங்கள் மக்களே!




பின்குறிப்பு:
யாருக்காவது படங்கள் தேவைப்பட்டால், மறுக்காமல் மறுமொழில சொல்லுங்க. உங்களுக்கு இல்லாததா? பிற்தயாரிப்பு இல்லாத ஒரிஜினல் படம். உடனே அனுப்பிடலாம்.

Wednesday, January 16, 2008

இரண்டாவது முறையாக

என்றும் போல் அன்றும் ஞாயிறு புலர்ந்தது. ஆழ்கடலின் அமைதியாய் என்றும் இருக்கும் என்னுள்ளத்தில் ஒரு குறுகுறுப்பு. யாரோ என்னைத் தேடுவது போல். திடுக் திடுக்கென திரும்பிப் பார்க்கிறேன். இன்று டேவ்வோடு கழிக்கும் நாள். மட மடவென வெளியில் செல்ல ஆயுத்தமானேன். மனசோ நிலைகொள்ளாமல் தவிக்கிறது. ஒரு வேளை டய்ய(யே)ன் என்னைத் தேடுகிறாளோ? சீக்கிரம் கிளம்பினால் அவளையும் இன்று பார்த்து விடலாம். 20 நிமிட ட்ரைவ் தான். 10 நிமிடம் அவளுடனும், ஜேமியுடனும் பேசிவிட்டு, அப்புறமாக டேவ்வின் இருப்பிடம் செல்லலாம். டய்யனை முதன் முதலாய் சந்தித்த நிகழ்ச்சிகள் கண் முன்னே விரிகின்றன. நிறவேற்றுமை காரணமாக என்னை ஏற்றுக் கொள்ள மறுத்த டய்யன். அவளை வழிக்குக் கொண்டுவர தளரா மனதுடன் போராடிய என் கிறுக்குத்தனங்கள். 2 மாத கால போராட்டத்திற்கு பின், இந்த 7 மாதங்களாக எங்களுக்குள் நடந்த பேச்சுக்கள், பறிமாறல்கள், அந்த சுருக்கத்தினூடே அமிழ்ந்து கிடந்த அனுபவக் கிளறல்கள், குழந்தைத்தனமாய் சுயம் கட்டவிழ வைக்கும் சம்பாஷணைகள், என்னை தோழியாகவும், தாயாகவும் பாவித்த அவள் நெருக்கம். ம்ம்ம்… என் மனசு முழுவது டய்யன் தான். ஒருவேளை என்னை அவளைக் காண வா என அழைக்கிறாளோ?

அலுவலக கட்டிடம் முன்னிருந்த ஊழியர் என்னை ஆச்சர்யம் கலந்த வேதனையோடு பார்க்கிறாள். ஏன்? என்ன ஆச்சி? அவளிடம் என்ன கேட்டேன், அவள் என்ன பதில் சொன்னாள் என அறிவிற்கு எட்டவில்லை. இருவரும் அமைதியாய் டய்யனின் அறைக்கு சென்றோம். வெற்று விழிகளுடன் ஜேமி வாயிலில். எல்லாமே புரிந்து போனது. புரிந்ததும், மனது திரும்பவும் அமைதியானது. கதவைத் திறந்ததும், அவளுக்கே உரித்தான, நேர்த்தியாக உடை உடுத்தி, கள்ளப் பார்வையில் சிரித்தவளாய், "எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்" என அவள் வாய் முணுமுணுக்க, படுத்தவாறே கைகளை நீட்டினாள். கைப் பற்றியதும், கண்கள் ஆயிரம் வார்த்தைகள் ஒரு சேரப் பேசின. ஆதரவாய் என் கரங்கள் அவளின் கரத்தை தடவிக் கொடுத்த வண்ணம் இருக்க, அமைதியாய் கண்மூடினாள். என் மனமோ சுயநலத்தின் மறுபிறவியாய், "டய்யன், மறந்துவிடாதே நாம் பேசிய கதைகளை. யாருக்கு அழைப்பு முதலில் வந்தாலும், அடுத்தவருக்கு "அதை"ப் பற்றி உணர்த்த வேண்டும் என உறுதி மொழியெடுத்ததை" என முணுமுணுத்தது. சட்டென மறைந்த சுயநலத்தில் பிறந்தது மீண்டும் ஆழ் அமைதி. என் கைகளை விடுவித்து, மெல்ல வாயிற்கதவருகே சென்று திரும்பிப் பார்த்தேன். "மீண்டும் உனைச் சேர்கையில், நாம் சிரித்து மகிழலாம் தோழி. போய், மீண்டும் வா."

வெளியே ஜேமியின் வெற்று விழிகள் நீர் சொறிந்த வண்ணம். என்னை இறுகத் தழுவிய அவர் தேம்பத் தொடங்கினார். பேச்சினூடே, "நீ வருவாய் என டய்யன் நிச்சயமாக நம்பினாள். எல்லோரும் நீ அவளை அடுத்த வாரம் தான் பார்க்க வருவாய் என ஆசுவாசப் படுத்த முயன்ற போதும் அவள் கேட்கவில்லை" என்றார்.

பின்குறிப்பு:
டய்யனுக்கு (Diane) வயது 85. உற்ற தோழியாய் எங்கள் 6 மாத கால உறவு அவளை ஒருமையில் அழைக்க வைத்தது. ஜேமிக்கு(James alias Jamie) 97 வயது. நாங்கள் மூவரும் பேச ஆரம்பித்தால், அந்த 2 மணி நேர கால அவகாசம் பத்தாது.

Monday, January 14, 2008

கண்மணித் தொடர்... பெஸ்ட் இஸ் ரெஸ்ட்

கண்மணி 'பதிந்ததில் பிடித்தது' சொல்ல கூப்பிட்டு இருக்காங்க அவங்களோட இந்த பதிவுல (http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html). அவங்களுக்கு முதல்ல நன்றி சொல்லி ஆரம்பிப்போம்.

எனக்கு பதிவு எழுத 10 அல்லது 20 நிமிடங்கள் தான். அதற்கு மேல நேரம் செலவழித்தது கிடையாது. அப்போதைக்கு மனசுல என்ன தோணுதோ, அவை மட்டுமே எழுத்துக்களாய். கவிதைகள் பெரும்பாலும் எப்பவோ எழுதியவைகள் தான். (இதுல கண்மணியை கலக்கிய கவிதையும் அடங்கும்). கவிதைகளும் 10 அல்லது 15 நிமிடத்தில் எழுதியவைகள் தான். எண்ணங்கள் செல்லும் வேகத்திற்கு டைப் அடிக்க முடியிறதும் காரணமாய் இருக்கலாம். அதனால எதுவுமே உருப்படி கிடையாது. ஒன்றைத் தவிர. (அதானே ஒன்னாவது இருக்கனுமேன்னு நெஞ்சை நிமிர்த்திக்காதீங்க மக்கா....). அது தான் தாயுமானவள்/அத்தையம்மா/.... (http://kaattaaru.blogspot.com/2007/12/blog-post_11.html) இது மட்டும் என்ன ஸ்பெஷல்ன்னு கேக்குறவங்க கோபியை கேட்கவும். அவரோட அன்புத்தொல்லை தாங்க முடியாம... 10 நாள் நச்சி தாங்காம, 10 நாள் ஓடி ஒளிஞ்சி, 10 நிமிஷத்துல எழுதி, 10 கரெக்ஷன் வாங்கி, 10 முறை திரும்ப திரும்ப வாசித்து... அப்பப்பா.. எத்தனை பத்து....தலைல குட்டு வாங்காத குறை தான். ;-)

இதிலே யாரைக்கூப்பிட.... எல்லாரையுமே கண்மணியக்கா 10 பேரை கூப்பிட்டு, அந்த 10 பேர், இன்னும் 10 பேரை கூப்பிட்டிருந்தா? இருந்தாலும் நாங்க ரூல்ஸ் மாற மாட்டோமில்ல.. அதனால... இதோ

1) யானைகளுக்கு சொந்தமான பொன்ஸ் (www.pookri.com)
2) கட்டுமான பிரிவுக்கு தலைவர் குமார் (http://madavillagam.blogspot.com)
3) சந்தன முல்லையாக வாசமளிப்பவர் (http://sandanamullai.blogspot.com)
4) தென்றாலாய் வருடுபவர், நாணயஸ்தன் (http://thendral2007.blogspot.com)
5) நம்மை பங்காளியாக்கி, மாயாவியாய் திரிபவர், பங்கு வணிகத்தை அலசி ஆராய்பவர் (http://aayirathiloruvan.blogspot.com) [சொக்கரே, இந்த முறை அழுகுணி ஆட்டம் ஆடப்பிடாது சொல்லிட்டேன். அதான் இரண்டாம் முறையும் விடாது கருப்பாய் தொடர்ந்திருக்கிறேன்]

பின்குறிப்பு:
ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கண்மணியக்கா பதிவுல ((http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html) படிச்சிக்கோங்கப்பா.

Sunday, January 13, 2008

பொங்கல் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!






பின்குறிப்பு:
பொங்கல் வாழ்த்துக்கு என்னடா பால் காய்க்கிறதை போட்டிருக்காளே அப்படின்னு எண்ண வேண்டாம் மக்களே. இருக்குறதை வச்சி வாழ்த்திட்டேன்.

Thursday, January 10, 2008

காதல் மீன்களும் தலாய் லாமாவும்

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல. என்னதான் தலைப்பு வைக்கிறதுன்னு இல்லாம போச்சப்பா.... ஜனவரி புகைப்பட போட்டில கலந்துக்கலாமின்னு சுட்டுத் தள்ளுனதுல மிஞ்சினது இதுதாம்பா... ஒவ்வொரு படமும் எடுக்குறது முக்கியமில்ல... அதன் பிற்தயாரிப்பு ரொம்ப முக்கியமின்னு ஆசிரியர்கள் சொன்னாங்க. அதுக்கு அழகான உதாரணமா நம்ம ஐஸ்ஸையும் சொன்னாங்க. அப்படி இருந்தாலும் இந்த சிறுமூளைக்கு இன்னும் பிற்தயாரிப்பிலே ஆர்வம் வரல. அதனால எடுத்ததை அப்படியே உங்கள்ட்ட கொடுத்துட்டேன். :-) சோம்பேறிப் படுபாவின்னு திட்டாதிங்க. காதிலே விழுது. முதல் படம் தவிர மத்ததெல்லாம் நேத்து எடுத்தது தான். முதல் இரு படங்களும் போட்டிக்கு. மத்தெல்லாம் உங்களுக்கு. எனக்கும் தான். ;-)

எனக்கு ரொம்ப பிடிச்ச படம். Paper Weight. உள்ளே டால்ஃபின் மீனினக் குடும்பம். அழகா இதயத்தின் வழியே குதிக்கிறாப் போல் இருக்கும். அரை இருட்டு அறையில், பேப்பர் வெயிட்டின் கீழே ஊதா வெளிச்சத்தை பாய்ச்சி எடுத்தது. மார்ச் மாதத்திலே ஒரு சுட்டிக் குழந்தையுடன் விளையாடும் போது எடுத்தது இந்த படம். உள்ளே 2 டால்பின்கள். ஒரு கோணத்தில் (angle) 2 மீன்கள் நான்காய் தெரியும். அதை கரெக்டா பிடிக்குறதுக்குள்ளே... அப்பப்பா... நாம கரெக்டா எல்லாம் இருக்குதுன்னு கிளிக்கப் போகும் போது.... ம்ம்ம்.... அந்த சுட்டி, லைட்டை படக்குன்னு ஆஃப் செய்துரும். அப்போ ஜாலியா தான் இருந்துச்சி. இப்போ இன்னும் ஜோரா இருக்குது. மலரும் நினைவுகள். :-)


இந்த படமும் எனக்கு பிடிச்சது. இதில் தலாய் லாமா புன்முறுவலோடு உலக உருண்டையைப் பார்க்கிற மாதிரி இருக்கும். One of the cherishable books by Dalai Lama (The Universe in a Single Atom: The Convergence of Science and Spirituality). புத்தக தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் வந்த மாதிரி எனக்கொரு ப்ரம்மை. உங்களுக்கு? ஆனா ப்ளான் எதுவும் பண்ணி எடுக்கல.

கீழ்வரும் படங்களும் எனக்குப் பிடித்தவையே. ச்சும்மா ச்சும்மா.... யான் பெற்ற இன்பம்.... ;-)












Monday, January 07, 2008

ஓட்டுதல் எனக்குப் பிடிக்கும்... உங்களுக்கு?

ஓட்டுறது ஒரு கலைங்க ... நம்ம குசும்பன் பண்ணுற வேலைய சொல்லலைங்க... அவங்க மாதிரி நமக்கு நகைச்சுவையா ஓட்டத் தெரியாதுப்பா. நான் சொல்லுறது தரையில் வாகனம் ஓட்டுறது. பாசமலர் அக்கா (? என்னது... பாசமலர்ல தங்கை தானே வருவாங்க) பாசமா மொக்கைப் போட கூப்பிட்டிருந்தார் (http://pettagam.blogspot.com/2008/01/tag.html). நம்ம அதை தவிர வேறேதும் எழுதுறதில்லைன்னு புச்சா வந்த அவுங்களுக்கு தெரியாது போல. ஆனாலும் நம்மளை மதிச்சவங்களை மதிக்காம விடலாமா? அது நல்லாயிருக்குமா? அதான் ச்சும்மா ச்சும்மா சுயபுராணம் ஒன்னு எடுத்துவிடப் போறேன்.


சின்ன வயசிலிருந்தே எனக்கு வாகனம் ஓட்டுறதுல அம்மாம் சந்தோஷம். முதல்ல ஆரம்பிச்சது 2 கால்(!) சைக்கிள் தான். அதுவும் பெரியவுக ஓட்டுற சைக்கிள். குரங்கு பெடல் போட்டு, நடக்கு நடக்குன்னு...... ம்ம்ம்..... அந்த காலம். அதுவும் பசங்களோட போட்டிப் போட்டுட்டு.... ஒருத்தர ஒருத்தர் முந்துறோமின்னு, இடிச்சி, முட்டிய பெயர்த்த நாட்கள்.... சுகமாத்தேன் இருக்கு. அதெல்லாம் ஒரு காலம்.

அப்புறம் மோட்டார் வண்டிகளின் வரிசை. முதல்ல வர்றது அம்பாசிடர் கார். 8 வயது சிறுமியாய் இருக்கும் போது, அப்பாவின் மடியில் அமர்ந்து ஸ்டியரிங் பிடிக்க, அவருக்கு தெரியல... தப்பான புள்ளைக்கு சொல்லிக் கொடுக்கோமின்னு.... அப்போ பிடிச்சிது கார் பயித்தியம். 10 வயசு வரை ஸ்டியரிங் மட்டும் தான். :-( அப்புறம் 10 வயசுல ஏதோ தைரியத்துல தனியா (திருட்டுத்தனமாத் தான்), முதல் பிள்ளையார் சுழி. தன்னோட மகள் யாரும் சொல்லிக் கொடுக்காமலே தைரியமா ஓட்டியது பார்த்து அப்பாருக்கு ஏகப் பெருமை. பெருமையா (அவர் காரை காப்பாத்திக்கவும் தான்) கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். திருட்டுத்தனம் தேவையில்லைன்னு சொல்லாமல் சொல்லிட்டார்.

13 வயசு இருக்குறப்போ லூனா. சர்... சருன்னு ஊரை வலம் வந்தது இன்னுமும் ஞாபகம் இருக்குது. வெள்ளை கலரு வண்டி.. செம்மண்ணா வீடு வந்து சேரும். ஆனா இது மேல ஆசை உடனே போயிருச்சி. த்ரில் இல்லாத மாதிரி ஒரு உணர்வு. அதுக்கு காரணம் அப்பாவோட புல்லட்ன்ன்னு நெனைக்கிறேன். டட் டட்டுன்னு ப்பெருசா சத்தம் போட்டு நெஞ்சை திடுக்கிட வைக்கிற அது மேல ஒரு கண்ணு. இல்ல...ரெண்டு கண்ணுமேன்னு சொல்லலாம். மெல்ல அவர்கிட்ட கிசுகிசுக்க... அம்மா காதில் அது விழ... செமத்தியா அப்பா வாங்கிக் கட்டிக்கிட்டாங்க அம்மா கிட்ட. புள்ளைக்கு ஓவரா செல்லம் கொடுக்குறாங்கன்னு பழி வேற. அதனால ரெண்டு பேரும் சேர்ந்து திருட்டுத்தனம் பண்ண வேண்டியதாப் போச்சி. ஹி ஹி ஹி. ஞாயிறு தோறும் காலையில எல்லாருமா அப்பாவோட பீச்சுக்கு போவோம். அன்னக்கி நான் மட்டும். மத்தவங்களை கட்டிங்ஸ் போட்டாச்சி. :-) அப்புறம் என்ன... புல்லட் ராணி ஆகிட்டேன். இன்னும் புல்லட் மோகம் போகலைன்னா பார்த்துக்கோங்க.

அப்புறம் காலேஜ் வாழ்க்கை. அக்காவுடன் லூனா. கடியா இருக்கும். ஏன்னா அவளுக்கு வேகம் பயம். எனக்கோ மெதுவாப் போனா பயம். முதல் வருடம் எப்படியோ சமாளிச்சிட்டேன். அந்த லீவுக்கு தாத்தா ஊருக்குப் போக, அங்கே ஸ்கூட்டர் முதல்ல ஓட்ட... அப்புறம் மெல்ல அப்பாகிட்ட ஸ்கூட்டர் வாங்கி கேட்க, எங்கள் ஊரில் முதல் முதலில் தினமும் ஸ்கூட்டர் ஓட்டும் பெண்மணி ஆயிட்டோமில்ல. இதுல கீழ விழுந்து வாரின கதையெல்லாம் நாங்க சொல்ல மாட்டோமாக்கும்.

ஒரு வழியா மேல்படிப்புக்கு ஹாஸ்டல்ல போட்டதும் தான் அம்மாவுக்கு நிம்மதி வந்திருக்குமின்னு நெனைக்கிறேன். அங்கேயும் சும்மா இருப்போமா? தோழ பெருமக்களோடு கம்பைண்ட் ஸ்டடி. பசங்க அவங்க வீர தீர செயல்களையெல்லாம் சொல்ல, பொண்ணுங்க ங்கேன்னு கேட்டுட்டு இருக்க, நாம செய்த வீர சாகசங்களை சொன்னா... நம்புனா தானே. தோழியின் அம்மா அப்பா வெளியூர் போயிருக்கப்போ... அவங்க வீட்டு ஆட்டோவை ஓட்டி நிரூபிக்க சொல்ல.... அதையும் விட்டு வைக்கல. ஆட்டோவை எருமை மாடு மேல ஏத்துன கதையெல்லாம் சொல்வோமாக்கும். ;-)

ஒரு வழியா ஆசையெல்லாம் போயிருச்சின்னு மட்டும் நெனைக்க வேண்டாம். எங்க ஊர்ல லாரி நெறையா உண்டு. தம்பியின் உதவியோடு... ஒரு லோடு அடிச்சோமில்ல. அதுக்கப்புறம் தான் மனசு நிம்மதியாச்சி. எல்லா வண்டியும் ஓட்டியாச்சின்னு மனசுக்குள்ள குதியாட்டம் போட்ட அந்த நிம்மதி அமெரிக்கா வந்ததும் போயே போச்சி. ஏன்னு கேக்குறீங்களா... இங்கே ட்ரக்குன்னு ஒரு வண்டி இருக்குதுங்க. இங்கே போய் படம் பார்த்துக்கோங்க (http://www.hankstruckpictures.com/len_rogers4.htm) எப்பப்பா.... அத்துணை நீளம். அதை பெருமூச்சோட பார்க்குறதோட சரி. ஓட்ட ஆசை இருக்குது. ஆனா அதுக்குன்னு தனியா லைசென்சு எடுக்கனுமாம். (என்ன இருந்தாலும் நம்மூரு போல வருமா?) ஏன் ஓட்டனுமின்னு காரண காரியமெல்லாம் சொல்லனுமாம். அதனால ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்குமின்னு அப்பப்போ பெருமூச்சியோட பார்த்துக்க வேண்டியது தான்.

எனக்கே அறுவையா இருக்குதே. மக்களே.... உங்கள் புதுவருடம் இப்படியா ஆரம்பிக்கனும். ம்ம்ம்... எல்லாம் உங்கள் நேரம். என்சாயீஈஈஈஈ.....

பின்குறிப்பு:
மொக்கை போட 4 பேரை கூப்பிடனுமாமே. வாங்க ராசாத்திகளா.... வாங்க....
1) காதலுடன் காதலன் சென்ஷி (http://senshe-kathalan.blogspot.com)
2) முயற்சியின் தலைவி முத்தக்கா (http://sirumuyarchi.blogspot.com)
3) அலசல் சிகாமணி காட்டான் தெகா (http://thekkikattan.blogspot.com)
4) மதுர சொக்கரு (http://aayirathiloruvan.blogspot.com)

Thursday, January 03, 2008

உயிரோடு உயிராய்

மற்றுமொரு வருடம். அதே நாம்; அதே மனநிலை. கொண்டாட்டம் ஒரு நாள்; திண்டாட்டம் பலநாள். சோம்பிக் கிடக்கும் நாட்கள்; கண்முன் விரியும் நிச்சயமற்ற நிலைகள். என்னடா.. என்னாச்சி இவளுக்கு. புது வருட கொண்டாட்டத்தில் தலையில் அடி பட்டுருச்சான்னு குழம்ப வேண்டாம் மக்களே. எப்பவும் போல தான் இருக்கேன். ஒரு அருமையான புத்தகம் (The Problem of the Soul by Owen Flanagan) அன்பளிப்பாக கிடைத்தது. முழுமூச்சா படிச்சி முடிச்சாச்சி. புத்தக விமர்சகம் பண்ண எனக்கு தெரியாது. ஆனால், மனதில் தோன்றிய எண்ணங்களை எனதருமை தோழ மக்களுக்கும் சொல்லி குழப்ப எனக்கு தெரியும். ;-)

படித்ததும் பற்பல சிந்தனைகள் கண்முன் விரிந்து, முன்னய காலத்துக்கு அழைத்துச் சென்றன. உடனே, பழைய பெட்டியை உடைத்தெடுத்து (?)… அச்… அச்.. அச்… (ஒன்னுமில்லைங்க தூசி)… அப்பா… கண்டுபிடிச்சாச்சி் அந்த பாட்டை. ;-) அன்று மனம் பிரதிபலைத்ததை கிறுக்கிய என் கைகள், இன்று ஏனோ எழுதத் தெரியாமல் தடுமாறுகிறது. சரி சரி…. இத்தோட நிறுத்திக்கிறேன்…. புரிஞ்சா புடிச்சிக்கோங்க ராசாத்திகளா…. புரியலைன்னா… எங்கிட்ட கேக்காதீங்கப்பா….. கால எல்லை தாண்டிவிட்டது.

பின்குறிப்பு (இந்த கிறுக்கலுக்கு):
Gist of the book is how to reconcile the two visions of mind.

உயிரோடு உயிராய்

ஆயிரம் கோடி நண்பருண்டு
ஆயினும் என்னைத் தேர்ந்தெடுத்தாய்
என்னுள் உன்னுடன் உறவாடினேன்
எனக்கு எல்லாமும் ஆனாய் நீ

நீயும் நானும் ஒன்றென்றாய்
ஒன்றாய் மாற்றுவது உன் திறன் என்றாய்
உன்னுடன் என்றென்றும் இருப்பேன் என்றாய்
இன்று, தனிமையில் தவிக்கவிட்டு எங்கு சென்றாய்?

என்னை நீ தேர்ந்தெடுத்தாய்
உன்னை நான் என்னவளாக்கினேன்
யார் யாரைத் தேடுகிறோம்
தேடல் நின்றது என்றெண்ணினேன்

நான் வேண்டும் என்பதாலா ஒளிந்து கொண்டாய்?
இடைவிடாது தேடுகிறேன்
என் தேடல் என்று நிற்கும்
என்னை விட்டுப் போகாதே

களிமண்ணாய் இருந்த என்னை
உயிர்மண்ணாய் உருவாக்கினாய்
உயிர் தந்து என்னுள் உயிரெடுத்தாய்
ஓருடலுக்குள் ஈருயிர் உள்ளதென்றாய்

என்னிதயம் உன் கை விளையாட்டு பொம்மையல்லவா?
விளையாடாமல் தள்ளிவிட்டதேன்?
விருப்பும் வெறுப்பும் உன்னுடையதாலா?
நீயும் நானும் ஒன்றல்லவா?

நீ என்னை உருவாக்கும் சிற்பியல்லவா?
உன் உளியால் காயப்பட்டேன்
காயம் என் காயம் மறக்கச் செய்ததை மறவேன்
வேண்டும் அந்த இன்பம் இன்று

நீ சொல்வது போல் வாழ்ந்தேன்
நீ சொல்வது போல் வீழ்ந்தேன்
ஒன்றுமில்லாதவனானேன்
ஒன்றாய் உறைந்தேன்

நான் வெற்றுக் காகிதம்
நீ வரையப்படாதது ஏதும் இங்கில்லை
ஆதலின், புதியதாய் ஒன்றும் என்னிடமில்லை
வரையத் தவறியது என் குற்றமில்லை

நீயின்றி நானில்லை
என்னிடம் உள்ளவையாவும் நீ தந்தது
உன்னால் வந்தது; எடுத்துவிடாதே
உயிர் கொடு; இல்லை உயிரோடு கொன்றுவிடு

-- காட்டாறு

Friday, December 21, 2007

ரெடி 1, 2, .... 22

2007 முடிவடைகிறது

ஆவலுடன் வரவேற்போம் 2008

இடையூறுகள் வரலாம்

தடைகள் பல சந்திக்க நேரிடலாம்

விழிப்புணர்வுடன் இருக்க கற்றுக் கொள்வோம்

வழிகாட்டியாய் வாழ்வோம்

தடைகளை தாண்டும் தைரியம் பெறுவோம்

கவனமாய் அடியெடுத்து வைப்போம்

முன்னெச்சரிக்கையுடன் செயல் படுவோம்

சவால்களை துணிவுடன் எதிர்கொள்வோம்

சிரித்து மகிழ்வோம்

ஒற்றுமையுடன் வாழ்வோம்

புதியன கண்டுபிடிப்போம்

புது நட்பு கொள்வோம்

திட்டம் தீட்டி செயலாற்றுவோம்

ஒற்றுமையாய் வாழ்வோம்

வீர தீர செயல்கள் பல புரிவோம்

மென்மேலும் உயர்வோம்

கனவுகள் பல காண்போம்

இயற்கையை நேசிப்போம்

ஓய்விற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்

ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம்
அன்பே சிவம்!
புதிய வருடத்தில் உடல், உள நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்!
அன்புடன்,
காட்டாறு

Thursday, December 20, 2007

வாருங்கள் வாழ்த்துவோம் மங்கையை!

நம் எல்லோருக்கும் மங்கை செய்து வரும் சேவை பற்றி தெரியும். உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளை (டிசெம்பர் 1 -- http://manggai.blogspot.com/2007/11/blog-post_30.html) ஒட்டி பல விழிப்புணர்வு கூட்டங்கள்/மாநாடு/இயக்கம் நடத்தினார். அவர் தில்லியில் வெற்றிகரமாக நடத்திய ஒரு கூட்டம் குறித்து பெருமையடைந்த UNICEF, அவருக்கு புதிய ப்ராஜெட் செய்ய அனுமதி கொடுத்ததை ஒட்டி, இந்த வாரம் தில்லியிலிருந்து கோயம்புத்தூர் பயணமானார். அங்கிருந்து எனக்கெழுதிய இ-மடலில் தனக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்தியா முழுவதிலிருந்தும் 400 பேர் பங்கேற்ற இந்த ப்ரோகிராம் நல்ல படியாக முடிந்தது என்றும், இறுதியில் அவருக்கு UNICEF-லிருந்து BEST IMPLEMENTER and ORGANIZER அவார்டும், சாந்தி ஆசிரமத்திலிருந்து மகிளசேவகி சிறப்பு அவார்டும் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.


நம்மிடையே வலம் வரும் ஒருவருக்கு கிடைத்த இந்த பெருமை நமக்கும் பெருமையே. மங்கையே தாங்கள் செய்யும் சேவைக்கு தலை வணங்குகிறோம். நீவீர் மென்மேலும் வளர, தங்களுக்கு உளநலனும், உடல் நலனும் கொடுக்க பிராத்திக்கிறோம்.
வாருங்கள் வாழ்த்தலாம் மங்கையை!

பின்குறிப்பு:
எனக்கு இந்த ப்ரோகிராம் பற்றி விரிவாக தெரியாததால், மங்கை பயணம் முடித்து திரும்பியதும் விரிவாக பதிவொன்று எழுதுவார் என நம்புவோம்.

Sunday, December 16, 2007

கண்டுபிடிங்க பார்க்கலாம்

எங்கள் ஊரில் இது பனிக்காலம். இன்னக்கி கூட அரை அடிக்கு பனி பெய்துள்ளது. இந்த காலங்களில் பூக்கள் பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். அதனால கஜானா போய், ஆயிரக்கணக்கான புகைப்படங்களுக்குள் புகுந்து, ஒரு அலசல் அலசி, வெளி வந்து பாத்தா..... லேட்டாச்சின்னு சொல்லிட்டாங்க. :-) ஆனாலும் பதிவிடாம விட முடியுமா? அதனால உங்களுக்காக இங்கே கொஞ்சம் பூக்கள். அதோட உங்களுக்கு ஒரு போட்டியும். இங்கிருப்பவை என்ன பூவென்று கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்து எனக்கும் சொல்லுங்கள். ;-)

படம் 1:




படம் 2:


படம் 3:



படம் 4:


படம் 5:


படம் 6:



படம் 7:



படம் 8:


படம் 9:


படம் 10: